அவளுக்கு அழவேண்டும் போலிருந்தது
அடுத்த நொடியே காலத்தின் ரயில்
பின்னோக்கி ஓடியது.
முதல் நிறுத்தத்தில்
கதவுகளற்ற கூண்டில்
சிறகுகளை
மயிரென்று நினைத்த பறவைகளுக்கு
உணவூட்டிக் கொண்டிருந்தாள்
அடுத்த நிறுத்தத்தில்
சிறையாகிவிட்ட வீட்டில்
கேள்வியின் பகல்களுக்கு பயந்தபடி
இரவுகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்
அடுத்த நிறுத்தத்தில்
உலகம் உருண்டை எனக் கண்டுபிடித்தவர்
எரடோஸ்தனிஸ் என்று படித்தபடியே
ஜன்னல் சதுரத்தை வெறித்துக்கொண்டிருந்தாள்
தினக்குடிக்கும் அடிதடிக்கும்
பழகிய தன் பழைய கண்களை
பார்க்க விரும்பாது
அடுத்தடுத்த நிறுத்தங்களைத்
தவிர்த்து விட்டாள்
இப்போது அவளுக்கு
சிரிக்க வேண்டும் போலிருந்தது
அதே பின்னோக்கிய ஓட்டம்
அதே பழைய நிறுத்தங்கள்
மழைக்குறிகள் தீவிரமாகிவிட்ட வானத்தை
உறுதிப்படுத்தியபடி
அங்கொரு கோமாளி
அரங்கிற்குத் தயாராகிறான்…
******
என் வாழ்வை எனக்கு வாழத்தெரியுமென
முகவரி எழுதாமல்
தபால் உறையிலிட்ட கடிதமொன்று
நெடுநாளாய் என்னிடம் உண்டு
தீர்க்கமான முடிவுக்குப் பின்
அதை யாரிடம் சொல்வதென்று தெரிவதில்லை
எனக்கென வரும் அதிர்ஷ்டங்கள்
பாதி வழியிலேயே குழம்பி விடுகின்றன
வீடுவரை வரும் மீட்பர்கள்
வாசலோடு திரும்பி விடுகின்றனர்
மலர்தலை மறந்த என் மரங்களுக்கு
நினைவில் எஞ்சியது
இலையுதிர்காலம் மட்டுமே
மீட்சியின் எல்லாப் பாதைகளும்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் போய்விட்ட பிறகு
எனக்கு யார்மீதும் எதன்மீதும் வருத்தமில்லை.