- கலிங்கம்
டஜன் கணக்காய் பட்டுப்புடவைகள்
பீரோவில் இருந்தாலும்
அம்மா அவற்றை உடுத்துவதில்லை
சேலை வைத்திருக்கும் அட்டைப்பெட்டிகள் அனைத்திலும் இரண்டு பாச்சை உருண்டைகள்
எப்போதும் கிடக்கும்
அத்திப்பூத்தாற் போல் அம்மா பட்டுப்புடவையை உடுத்த நினைக்கும்போது
மாடியில் இருக்கும் பீரோவில்
என்னை ஏதேனும் ஒன்றை
எடுக்கச் சொல்லிப் பணிப்பாள்
நான் எடுத்துத் தரும் புடவை
அவளது கல்யாணச்
சேலையாகவோ பரிசச்சேலையாகவோ இருந்தால் அம்மாவிற்கு ஏக சந்தோஷம்
ஒவ்வொரு முறை சேலையை
எடுத்துத் தரும் போதும்
பாச்சை உருண்டையின் வாசனையை நான் முகராமல் விட்டதில்லை
அதுபோல் திருஷ்டி கழிக்க
சூடம் எடுக்கும் போதும்
சூட டப்பாவின் வாசனையை
முகராமல் விட்டதில்லை
அம்மாவோடு நான் எப்போதும்
தொடர்பு படுத்திக்கொள்ளும் வாசனைகள்
பாச்சை உருண்டை வாசனையும்
சூட டப்பா வாசனையும்
இவ்விரண்டு வாசனைகளும்
எனக்கு எப்போதும்
மோப்பக் குழையாத அனிச்சங்கள்
கல்யாணச் சேலையையும்
பரிசச் சேலையையும்
பெண்களின் நெஞ்சம்
எப்போதும் மறப்பதில்லை
அம்மாவின் கல்யாணச்சேலை
சிந்தாமணி நிறத்தில்
கத்தரி பூ வண்ணக் கரை வைத்தது
இன்றுவரை அதை
எப்போது உடுத்தினாலும்
அக்கம் பக்கத்தில் எல்லாம்
‘இது என் கல்யாணச் சேலை’ என்று சொல்லி மகிழ்வாள்
ஆண்களுக்கு
கல்யாண வேட்டிச்சட்டை
பரிச வேட்டிச்சட்டை
என்பதெல்லாம் இல்லை
எப்போதும்
வெள்ளையும் சொள்ளையும் தான்
பிரித்துணர வழிவகையும் இல்லாமல்
எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான
தங்கச் சரிகை.
- மை அணல்
தலைவாருவதைப் போல அல்ல
மீசையை வாருவது
அதில் இருக்கும்
அலகால் தன் சிறகைத்
தானே கோதும்
பறவையின் அழகு
பிறர் காணும் போது
கண்ணாடியைப் பார்த்து
தலைவாரவே வெட்கும் நாணம்
மீசையை வார கூடுதலாக
வெட்கிப் பூக்கும்
முறுக்கி விட்டால் வெட்கம் தோற்கும்
சீப்பால் மீசையின் இருபுறமும்
கீழ்நோக்கி சீவி படிய விட்ட பின்
மேலுதடு என்னும் குவி பிறையை
மறைத்துக் கொள்ளும்
அதே வடிவத்தில் இருக்கும்
மீசை என்ற கருமேகம்
அவளுக்கு என்னை விட
முடி அதிகம்
அவளுக்கு ஜடை
தொடை வரை
எனக்கோ எலிவால்
என்பன போன்ற
கூந்தல்களின் அழுக்காறுகள்
மீசைகளுக்கு இல்லை
அது ஒவ்வொரு ஆணின்
தனிப்பட்ட தாரகை
தனித்துவமான தூரிகை.
- மருதோன்றி
மருதோன்றி மைலாஞ்சி
மயிலாஞ்சி மருதாணி
பசியத்தை சிகப்பாக்கும்
மருதாணி வேதியியலில்
உன் விரல்கள் மட்டும் எப்போதும்
அதிக மதிப்பெண்களுடன்
தேர்ச்சி பெற்று விடுகின்றன
பூக்கள் மேல்
அபிலாசை நிறைந்த உலகத்தில்
இலைகளில்
மருதாணிக்கு மட்டும் தான் மவுசு
அதனால் மனமுடைந்த
மருதாணி பூக்கள்
நெஞ்சில் கனல் சுமக்கின்றன
அவை சுமந்த கனலை
நீ உள்ளங்கைகளில்
பிரதிபலிக்கிறாய்
அவ்வளவே.