- அதற்குப் பிறகான காலத்தில்..
மேஜையில் விட்டுப் போயிருக்கிறாய் ஒரு சிறிய ஞாபகத்தை
அதன்மீது கனமான சொல் ஒன்றை
எடுத்து வைக்கிறேன்
பொருளற்றுப் போவதில்லை உன் எனது அர்த்தங்கள்
மற்றும்
செலவிடமுடியாமல் தேங்கிவிட்ட பொழுதுகள்
உரையாடல்களைத் தழுவிய கைகளில் இருந்தன
அன்றைய இணக்கத்தின் சாளரம்
அதில்
கசிந்திருந்தது தருணம்
முரண் எல்லைகளை வரைந்து வைத்திருந்த தர்க்கம்
நழுவி அகன்று பறந்திட விரிக்கிறது
சொற்களை
துடிப்புள்ள அசௌகரிய லயத்தை உற்றுப் பார்க்கும் கணத்தில்
மாயமாகிவிட்டிருந்தது
தனிமை
****
- இரவு எல்லைகளுக்கு அப்பால்..
படியிறங்கித் தொட்டுவிட்ட பாதாளத்தில்
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது இருட்டு
மேலேயிருந்து யாரும் அழைக்கவில்லை
யாரையும்
கீச்சொலிகள் சிதறும் பக்கச் சுவர்களில்
மிரள்கின்றன குரல்கள்
அவை
பழியேந்திய துயரமோ
மேற்கொண்டு சொல்லுவதற்கு குறையுள்ள ஆதங்கமோ
உதடுகள் வறண்டு தாகத்தோடு காத்திருக்கின்றன
புதிய காதுகளை எதிர்நோக்கி
கடைசிப் படியில் உட்கார்ந்தபடி
உச் கொட்டுவதற்கு உதடு குவிக்கிறேன்
குரல்வளையிலிருந்து அலறி வெளியேறி
இருட்டில்
தலைகீழாகத் தொங்குகிறது
யாருடையது என அறிந்திராத ஒரு முதிர்ந்த குரல்
****
- என்கிறோம் என்கிறேன்..
குறிப்பிட்டுச் சொல்லுவதற்கு உற்ற நடத்தையை
மேதையின் நகக்கண் வெறித்துப் பார்த்தபடி காத்திருக்கிறது
நூற்றாண்டுகளைப் புரட்டிக்கொண்டிருக்கும் விரல்களில்
கொலைக்களங்களின் இரத்த தூசு படிகிறது
மெல்ல மெல்ல
உருவிய வாள் வீச்சில் மோதித் தெறித்திருக்கும்
துருவேறிய பட்டறைச் சத்தத்தோடு
வீழ்ந்து உருண்டோடிய தலைகளின் தயவில் உறைந்திருக்கிறது
உலோகங்களின் காலம்
மட்கிய நெடியேறி புரைத் தட்டும் மூளையின் மடிப்புகளை
நீவிக்கொண்டிருக்கிற புராதான சிந்தனையூடே
கோட்பாடுகளைத் தையலிட்டு சுருக்குப் பையில்
சேமித்துக்கொள்ள வழிமுறைகள் உண்டு
உணர்வை உரித்து ருசி பார்க்கும் நாவில்
மிச்சமிருக்கும் உயிர்ச்சத்து
வரலாற்றுத் தாயின் திரவப் புரதத்தை நினைவூட்டலாம்
ஆனால்
கையேந்தும் பிச்சையில் இடப்படுவது அத்தனையும்
கள்ள மௌனமே
சில்லறைகளாகக் குலுக்கி உலுக்கித் தேற்றிக்கொள்வது
செல்லுபடியாகாத நாணயங்களைப் போலுள்ள
நாணயங்களை
***
- பிடிமானங்கள் தளர..
ஊமையாக அசைந்துகொண்டிருக்கும் நகரத்தின்
நிழலாட்டம் மீது
கண்ணாடி ஜன்னலுக்கு இந்தப்பக்கத்திலிருந்து
அந்தி வானின் சாம்பல் நிற படுதாவை
கீழிறக்கி மூடுகிறேன்
மனதில் முளைக்கும்
நட்சத்திரத்தின் வெளிச்ச முனையை
சிறு துணுக்காக்கி
முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டி வைக்கிறேன்
அது
கண் மூடுகிறது
துண்டிக்கப்பட்ட வார்த்தையின் விளிம்பென
அனைத்து கவிதைகளும் நுட்பமான உரையாடல்கள்
Excellent