cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

சுகன்யா ஞானசூரி கவிதைகள்


  • எம்புகள் உதிரும் நாளில்

அகில் மணக்கும் காடுகளில்
அகிலத்தின் ஆன்மா
உறங்குவதாக நம்பப்படுகிறது
எத்தனை எத்தனை வேட்டைகள்
இல்லையென ஒருபோதும் கைவிரித்ததில்லை
ஏகாந்தப் பெருவெளியை
ஏற்றுமதி செய்தபின்
காட்டுச் செல்வங்களையெல்லாம்
வாரி விற்றபின்
மீந்திருக்கும்
பட்ட நிலத்தில்
நம் எம்புகள்
உதிரும் நாளில்
பசி மணக்கும்.


  • வலசைப் பறவையின் சொற்கள்

மழை விட்ட
மரத்தில் சொட்டும்
ஈரலிப்பைப் போலொரு
சொல்லைத் தேடுகிறேன்.

***

கற்றாழைச் செடிபோல்
வறண்ட நிலத்திலும்
இருக்கவே செய்கின்றன
ஈரலிப்பான சொற்கள்.

***

இலையுதிர் காலத்தின் முடிவிலும்
வசந்த காலத்தின் துளிர்ப்பிற்கும்
இடையில்தான்
வாழ்க்கை பயணப்படுகிறது.

***

பருவகாலங்களைப் போலவே
பண்புகள் இருக்கின்றன
காலத்தே உதிர்க்கும் நம்
சொற்களுக்கும்.

***

அகதியென விழிக்காதே
வானத்திற்கும்
பூமிக்கும் இடையில்
வலசை போகும்
பறவைக்கு
சிறகுலர்த்தும் இடமெல்லாம்
கூடே.


 

About the author

சுகன்யா ஞானசூரி

சுகன்யா ஞானசூரி

இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்திலுள்ள அச்சுவேலி வடக்கில் பிறந்த ஞானசூரி முதுகலை அறிவியல் நுண்ணுயிரியல் துறை படித்தவர். 1995இல் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கும், 1996இல் வன்னியை விட்டு தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர். தற்போது திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் ஆய்வகத்தின் நுண்ணுயிரியல் துறையில் தொழில்நுட்புனராகப் பணியாற்றுகிறார்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு : அலைகளின் மீதலைதல் (2008) , இரண்டாம் கவிதைத் தொகுப்பு : நாடிலி (2021)

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website