- உப்பு
இட்லி மாவு அரைக்கும்போது
எப்போதாவது
அம்மாவுக்கு திடீர் என்று போண்டா சுடத்தோன்றிவிடும்
கொஞ்சம் வெங்காயம் மிளகாய் போட்டு
எண்ணெயில்
கிள்ளிக் கிள்ளிப் போட்டு
சுட்டெடுத்து
முதலில் அப்பாவுக்குக் கொடுக்கும் அன்பை
உப்பு சரியான்னு பார்த்துச் சொல்லுங்க என்கையில்
அத்தனை அழகு சுடரும்
அப்பாவின் திதிக்கு
சுடும்போது
ஒருகாகம் ஜன்னல் வழியே
கத்தி அழைத்தது
ஒரு வடையை நீட்டியதும்
கையிலிருந்து எடுத்துப் பறக்க
அம்மா படையலிட்டபிறகுதான்
காக்கைக்கு வைக்கவேண்டும்
என்றபோது சொன்னேன்
உப்பு சரியான்னு பார்க்கக்
கொடுத்தேன்.
அம்மா சிரித்தார்
எப்போதும் சிரிக்காத அந்த நாளில்.
- சொக்கநாச்சி ஆத்தா
வயல் வேலைக்கு இப்போதெல்லாம் சொக்கநாச்சி ஆத்தா வரதில்லயே..
லேசுபாசா செய்யற நூறு நாள் வேலைதான் பிடிக்குது
என்று கடும் வேலைப்பிரியையான ஆத்தாவிடம்
நீட்டிமுழக்கியவளிடம் சொன்னாள்..
உன்கிட்ட சொல்வதற்கென்ன
நீ எம் மகளாட்டம்
இருமுனா தும்முனா
காலோட மூத்ரம் வந்திருதாத்தா
வயல் நமக்கு சோறு போடற சாமியாக்கும்
அங்க போயி அசூசயாக்கலாமா
நூறுநாள் வேலைனா
ரோட்டோரம் வேலை
அதான் என்றாள்.
Painting Courtesy : Artist – Sivabalan