cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

முபீன் சாதிகா கவிதைகள்


1. ஒரு மீன்

வயல் துள்ளும்
கயலின் நீர்த்துளி
கண்ணில் படர்ந்து
திரையிடும் சமயம்
வெளுக்கும் வானத்து
துண்டென இறங்கும்
மதிய நிலாவும்
கதிரின் விளிம்பில்
கனத்து முகிழும்
பனியெனப் பெய்து
தாகமும் நாதமும்
கலக்கும் சொர்ண வயலில்
மணம் பரவும்
அனலென

****

2.உப்பின் சுவை

கடல் சூழும் விதானம்
உப்பின் தகவாய்
முனைந்திருக்கும் நிழலில்
வயலாடும் வெண்மை
காரமும் படிந்து
ஈரமும் ஓரமும் பரவும்
கல் எனவும் மாறி
கடிந்த மெய்புலம்
வனம் சூழ் அவனியில்
தாள் நிலவி தனித்தாடி
புலவும் புரக்கும்
தாகமதை விடுத்து
நலம் பிரிந்து சேர
நிறம் மாறிப் பெயர
கருமையும் செம்மையும்
கலந்து சுவைக்கூட்ட
மையத்து விளையும்
தூளெனவே

****
3.கிளி மாயம்

சோளக்கருது
காற்றில் பறக்க
கிளியான அவள்
மிகச் சிறுத்து
அக்கருதில் ஒட்டி
சிறு துணுக்கெல்லாம்
சிதறிச் சிதறி
கிளிக்கூட்டம்
கொத்தித் தின்ன
சோளத்தின் மணம்
பறவையின் நாசியில்
புகுந்து அவளுள்
நிறைய வயல்முழுதும்
பரவும் அவளும்
கிளிகளைத் துரத்தி
ஒரு நொடியில்
கருதின் அணுவில்
இழைந்து சோளமென
மாறி கிளிகளின்
உணவாயினளே

****
4.பிறப்பு

தோளிலிருந்து பிரிந்து
பிறந்தது எலும்பின் பிறப்பாய்
வடிவெடுத்தது வலியின் உரு
வாளின் கூரில் வகிர்ந்து
தனித்திருக்கச் செய்தும்
உள்ளிருந்த ஊமை பிணி
ஓயாது என்றே ஊளையிட்டு
முளைத்தது உயிரின் விதை
காயத்தில் வளரும் காயமாய்
குருதி கலந்த நீராக
திடத்தின் நீர்மமாக
பிளவடைந்த பின்னும்
சிரமும் சினையும் பாதியாக
பிறவியின் ஆதிகணமும்
கறைந்து பெருகியது ஊண்

****

5.சரிதம்

அதிரும் புள்ளியில் அமையும் துகளில்
பொதியும் அலை இணையும் பிரியும்
காலச் சுழலின் மின்முன் மாற்றி
ஒற்றை அச்சில் நிலைக்கும் ஊசல்
காரணமும் பதிவினதாய் மாய
காரியமும் மதியினது போல் வெருள
வட்டத்தின் ஆரம் தொடும் மீன்
ஈர்த்தது கோள் விசையுறு பந்தாய்
அகம் விரிந்து அண்டத்தில் கலந்து
பின் உறி தகவில் பாய்ந்து பொழிய
ஒளி என்றும் ஒலி என்றும் மீட்டு
உயிர்ப்பகா சரிதத்தை எழுதும்
கனவாய் மிதந்து குழைந்த எண்ணம்
மறையா புறமும் எங்ஙனம் பயணித்து


கவிதைகள் வாசித்த குரல்:
 முபீன் சாதிகா
Listen On Spotify :

About the author

முபீன் சாதிகா

முபீன் சாதிகா

தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.

'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.

தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website