கைதேர்ந்த மீனவனாய்
ப்ளாக்குகளுக்கும்
அன்ப்ளாக்குகளுக்குமிடையே
வலையை வீசியெறிகிறேன்.
ஒற்றை மீன் மட்டுமே விழுந்தால்
மீன்பிடி தொழிலை விடுத்து
நிலவைத் துரத்தும் தொழிலில்
மரத்தடியில் தங்கிவிடுகிறேன்.
அதுவே இரட்டை மீனெனில்
மீன் பண்ணையொன்றிற்கு
நீர் சேகரிப்பதற்காகவே
மிச்ச நாட்களை
துட்சமாய் வீணடிக்கிறேன்.
லட்சோபலட்சம் குட்டையிருந்தாலும்
நீந்தத் தெரியாத மனம்
வழுக்கி விழுந்த குட்டையை விட்டு
எழுவதேயில்லை!
****
இரையை அள்ளி வீசுவதைப்போல
குறுஞ்செய்திகளை
வீசிக்கொண்டே இருக்கிறேன்
புழுதி பறக்கும் நெற்களத்தில்
புள்ளினத்தின் கால் சுவடுகளின்றி
எறும்பு இழுத்த இரையாய்
நான் அனுப்பியவைகள் அனைத்தும்
நீல உடை அணிவதேயில்லை ஒருநாளும்
நிராயுதபாணியாக நிற்பவைகளை
மறைந்திருந்தே ரசித்துக் கொள்கிறாய்
கூடவே என்னை
இம்சித்துக் கொல்கிறாய்
பதிலேதும் அனுப்பாமல்!
****
சினம்கொண்டு சீவியெறிந்த சொற்களை
முகம் சிவந்த எமோஜியை
கரடு முரடான குரல் பதிவுகளை
அனுப்பியவுடன் அழித்துவிட்ட
குறுஞ்செய்தித் தடங்களை
இன்னும் பிறவற்றைச் சேர்த்து
இருபத்து நான்கு மணி நேரத்திலேயே
விழுங்கும் முதலையொன்றை
நீ வளர்த்து வருகிறாய்.
விடிந்ததும் வாசல் கூட்டிக்
கோலம் போடுவதைப்போல
உன்னுள்ளிருக்கும் கீரியோ அல்லது
என்னுள்ளிருக்கும் பாம்போ
எழுந்து வந்து
இதயத்தை அனுப்பி
மன்னித்து விடு என மன்றாட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக
அந்த ராட்சத முதலை
எந்தக் கேள்வியும் கேட்காமல்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
வாடிக்கையாய் செய்ய வேண்டும்
அதுதான் பெரிய வேடிக்கையும்கூட!