cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

ரத்னா வெங்கட் கவிதைகள்


1

சாயல்களுக்குள்
சாயம் போனவற்றை
ஒரு முனைப்புடன்
தேடுதலை
வழக்கமாக்கி
நீலம் நீர்ப்பதும்
சாம்பல் பூப்பதும்
தன் குற்றமென
ஆகப்பெரிய துக்கமென
சுயமழித்துப் புறம்பேசித் திரிகிறாள்

பூசிய இருண்மை
முன் வகிட்டிற்குள்
வெள்ளியாகும் முன்
பொருந்தா ஆசுவாசமெனப்
புறம் தள்ளியதை
அரைக்கணமேனும்
இழுத்துவிடும் மூச்சினுக்குள்
உணரத் தலைப்படுவாளெனில்
விட்டுக் கழன்று
உதிர்வதன் சூட்சமத்தை
அவள் அறியக் கூடும்

அரவங்களற்ற நெடும்பாதை
கண்முன்னே இரண்டாக
திகைப்பூண்டை மிதித்தவளாய்
செயலிழந்து பிதற்றுபவளை
உற்றுக் கேளுங்கள்
ஒற்றைக் கரம் நீட்ட வேண்டாம்
ஒரு தோள் தட்டலில்
கட்டி வைத்திருக்கும்
வசியத்தின் பிடியவிழ
விலகி அவள் நடக்கக் கூடும்.

***

2

இனியிது எனத் தொடங்கி
இனித் தேறாதெனும்
இடைப்பட்ட காலம் வரை

இளம் மஞ்சளில் வடுவாய்
நதி மறைந்த தடத்தை
கண்டு பிடித்தவள் அவளே

இதுதான் எனப் பற்றியதை
இறையின் வடிவென
உயர்த்தியவள் அவளே

இயற்கையின் இயல்பை
பகுத்தாய்ந்தால்
முழுமையற்றதாகுமெனப்
பிதற்றியவளும்

இருப்பின் விதியென
பெருவனத்தின் குரூரங்களை
அனுமதித்தவளும்

இறுமுறியைக் கையிலேந்தி
உலர்ந்த நியாயத்திற்கென
மனுப் போட்டவளும்

இறைஞ்சுதல் தாழ்த்த
முறிந்த சிறகினை மறைக்க
பறப்பதின் துடிப்பைத் துறந்தவளும்

இறந்தவளுக்கான பாதையை
முன்னோக்கு ஏதுமின்றி
தேர்ந்தெடுத்தவளும்

இறவியும் இறைவியும்
இன்பமும் இன்னலும்
இகந்து பட்டவளும்

….அவளே

***

3

உனக்கென்ன…. ?

இல்லையென்ற அவர் முடிவுக்குள்
இருக்க வேண்டுமென்ற மன அரிப்புக்குள்
இருக்கக் கூடுமென்ற புறணி பேசுகிற ஆவலுக்குள்
இல்லாது, இருந்து
விட்டும் விடாது
பட்டும் படாது
தொடர்கிறது
நிழலின் வடிவாய்
குறை..

***

4

புரியாத மொழியில்
ஏளனம் செய்பவனிடம்
மன்றாடிக் கொண்டிருக்கிறேன்
காரணங்களை அடுக்கியும்
தன்னிலை விளக்கங்களாய்ப் புகைந்தும்
எத்தனையோ அறிந்தும் புரிந்தும்தான் என்ன?
பற்றாது அணைவேனென்னும்
அடத்தினை ஊதும் குழலாய்
புகை படிந்து
களைத்தே கிடக்கிறது
இருப்பு…

***

5

“Nor hell a fury like a woman scorned.”

உலர்ந்த இரவுகளில்
ஒற்றை நட்சத்திரமாய்
தரையிறங்கித் தொடுகிற
நினைவிற்கு
தேவ மல்லியின் வாசம்…

கழன்று தொலைந்த
வலதின் இன்மைக்கு
கள்ளத்தனமாய்
வருகைப் பதிவிடுகிற
இடக்கால் கொலுசொலியின்
அசையாத விசுவாசம்…

ஊசி முனைத் தபஸின்
சாட்டியத்திற்கு
இமையா வரமும்
உடையாது உதிரும்
துளிகளின்
ஓயாத ரீங்கரிப்புமாக
இருளை இசைக்கிற
வேங்குழல் துளையிடும் நாதம்…

சுழன்று சுழன்று
உள்ளிழுத்தும்
புறந்தள்ளியும்
விளையாடுகிற
அனுகூல மாயைகளின்
நிக்கிரானுக்கிரகம்…


கவிதைகள் வாசித்த குரல்:
 ரத்னா வெங்கட்
Listen On Spotify :

About the author

ரத்னா வெங்கட்

ரத்னா வெங்கட்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website