1.தீராப் பயணம்
பறிகொடுத்த மலைக்கு
ஈடாக
எடுத்துக்கொள் என்கிறது
புறவழி
புறப்படும் வரை அறிந்திருக்கவில்லை
அடையும் இலக்கில் எங்கிருக்கிறது
அன்பின் உச்சி
2. பாதை மடிப்பு
எதிலிருந்து தொடங்கியதென்று அறியாத
முடிச்சோடு
அவிழ்கிறது அப் புறவாசல் கணக்கு
பண்பவிழா சூத்திரத்தோடு
கொள்ளப்பட்டன அர்த்தங்கள்
கொடுக்கப்பட்டன நிர்மாணங்கள்
இது என் வாசல்
நான் அறியா வழிக்குள்
கொல்லப்பட்டன அர்த்தங்கள்
கொடுக்கப்பட்டன நிர்மால்யம்
ஊற்றுக்கண் உடன் வர
உடைந்திடும் கண்ணீர்
உதிர்த்திடும் கொடிமுல்லையில் பூக்கிறது
சரம் சரமாய் நயவஞ்சகம்
அது நிழலுக்கு விரிக்கும் வாசனையாகி
உடன் வருகிறது
உடன் வரா பாதைகளோடு
3. வரிக்குள் விரியும் அலை
முத்தக் கோட்டைத் தாண்டும் முன்னே
முடிந்துவிட்ட விளையாட்டில்
களைத்திருப்பாய்
கிறுக்கிய வரியில்
இறங்குவதாய் மாயும் எண்ணம்
மடித்து தந்த உன்னை
எத்தனை அடுக்கில் சேமிக்க
மனம் மேடு
கரை மீள
பார்
பற்றுகிறது உன் அலை
தெரியாது தானே
அலைக்கு காது தர
கழன்றுவிட்ட முத்துக்களை முதலில் சேமி
செப்பனிட துணியும் போது
அணிந்துகொள்ள காரணமுண்டு
கடல் கோட்டின்
மேலுதடு
கரை மேட்டின்
கீழுதட்டை தழுவிக்கொள்ளும் போது
மீண்டும் பிறப்போம்
Art : joseartgallery.com