cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

சாய்வைஷ்ணவி கவிதைகள்


  • யாத்திரைக்குப் புறப்படுதல் அல்லது நித்திரைக்குத் தயாராகுதல்

நித்திரைக்குத் தயாராகுபவனின் மகிழ்ச்சியோடு
என் யாத்திரைக்கு நான் தயாராகுவேன்
விரிப்புகளைக் கலைத்துவிடாமல்
உடலைக் கிடத்திவிட்டு
சுகந்தம் பரவும் நறுமணத் தைலங்களை
உடலெங்கும் பூசிக்கொள்வேன்
இறுதியாகக் குளித்து வந்த ஈரம்
உலராமல் கூந்தலிலிருந்து
சொட்டும் நீரால்
கோடைக்காலத்தை குளிரச்செய்வேன்
இளஞ்சிவப்பு ரோஜாக்களில்
பன்னீர் தோய்த்து
அறையெங்கும் தூவச்செய்வேன்
மெல்லிய விளக்கொளியில்
பின்னணி இசையற்ற
ஜேசுதாஸ் குரலை ஒலிக்கவிட்டு
மெதுவாய் முணுமுணுப்பேன்
தானாகவே மூடும் கண்களை
இனி ஒருபோதும் திறக்கக்கூடாதென
இறுக்கமாய் பூட்டிக்கொள்வேன்
நானென்ற ஏதோ ஒன்று
இதுவரை யாரும் காணாத
தீர்வற்றப் பெருவெளியை
மௌனமாய் அடைகையில்
இப்போது போல
நிரந்தரமாய் தனித்திருப்பேன்

 


  • காந்தை

சுமக்கும் செங்கற்களின் எடையழுத்த
பூமியை சிற்றங்குலம் மிதித்தேறி
காற்றில் நிறம் கூட்டுகிறாள்
பள்ளியிலிருந்து பணிக்கு
இடம்மாறியிருந்த சிற்றாள்
அணிந்திருந்த அப்பாவின் சட்டைக்குள்
வளரும் அங்கங்கள் சிறுமூச்சிற்கும்
எட்டிப்பார்க்கும் கணங்களில்
கவனமாய் நீவிக்கொள்கிறாள்
தன் முழுக் கூட்டுப்புழு உடலை


  • காதொளிரி

கதவற்ற குடிசையின்
மென் கனைப்பிற்கு
சற்றே அசைந்துக்கொடுக்கிறது
ஊரடங்கக் காத்திருக்கும் திண்ணை
கலிகாலமெனக் காது மூடிக்கொள்ளும் கிழவி
குண்டலமாட பொக்கையசைக்கிறாள்
வெற்றிலை சாறு அவள் பால்யத்தின்
கனைப்பை மெல்லமாய் இசைத்துப்பார்க்கிறது


கவிதைகள் வாசித்த குரல்:
  சாய்வைஷ்ணவி
Listen On Spotify :

Art : behance.net

About the author

சாய் வைஷ்ணவி

சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website