- பரிபூரண சுதந்திரம்
இனி நீ திரும்ப என்னிடம் வரமாட்டாய்
என்ற முடிவை அறிந்த பின்
உன்னை அதீதமாக நேசிப்பது
எத்தனை இலகுவாக இருக்கிறது எனக்கு
உன் இடையூறு இல்லாமல் இப்போதுதான்
என் காதல் அதன் பரிபூரண
சுதந்திரத்தை அடைந்துள்ளது..!!
- நினைவின் கதகதப்பு
உன் நினைவுகளைப் பற்றிக்கொண்டு
காயங்களை மறப்பது
எனக்கு எத்தனை எளிதாக இருக்கிறது தெரியுமா
குளிர்காலத்தில் பற்றியிருக்கும்
ஒரு தேநீர் கோப்பையைப் போல்..!!
குழந்தை கவிதைகள் :
அலுவலக வேலை முடித்துவிட்டு
மாலைவேளை வீடு திரும்புகையில்
கயல்குட்டி கதவருகே நின்று பயமுறுத்துவாள்
அம்மாவும் பயந்ததாகக் காட்டிக்கொள்ள,
கைதட்டிச் சிரிப்பாள் கயல் ..
தினமும் இந்த விளையாட்டு நடக்கும்
எப்போதாவது கயல் கதவருகே நிற்கவில்லை என்றால்தான்
உண்மையில்
பயந்து போகிறாள் அம்மா ..!!
உவர்ப்பின் சுவையை
உப்பு என்கிறாள்
காரத்தைக் காயமாகப் பாவிக்கிறாள்
நாவின் சுவையைச்
சொல்லத் தெரியாது திகைக்கையில்
தேன் அள்ளி அவள்
நாவில் தடவுகிறாள் அம்மா
பெரும் புன்னகை ஒன்றை உதிர்த்துத்
தான் இனிப்பின் சொந்தக்காரி
என்பதைக் கயல் சட்டென நிரூபிக்கிறாள்..!!
இரண்டு ஓவியங்களை வரைந்து
கண் முன்னால் நீட்டி
“எது நல்லாருக்குமா”
எனக் கேட்கிறாள் கயல்குட்டி
இரண்டில் சுமாரானதை
சிறந்ததெனக் கூறுகிறாள் அம்மா
“போம்மா உனக்கு ஒன்னுமே தெரியல” இதுதான் சூப்பர் என
இன்னொன்றைக் காட்டி சிரித்துவிட்டுச் செல்கிறாள் கயல்
பெரும் பிரளயம் ஒன்றைத்
தவிர்த்த நிம்மதியில்
பெருமூச்சுக் கொள்கிறேன் அம்மா..!!
Art Courtesy : SARNOFF
அருமை