- நாளை கதையை நாளைப் பார்க்கலாம்
ஈவு தொகை இல்லாத கணக்கில்
நடுவில் நிற்கிறான் ஒரு சம்சாரி
அவனை கழுத்தைப் பிடித்து
அடுத்த கட்டத்துக்கு தள்ளுங்கள்.
நாற்பது தொடக்கத்தில்
ஞாபக மறதி நோயால் பீடித்தவன்
பால் பாக்கெட்போக மீந்த சில்லரையை
எத்தனை தரம் எண்ணுவான்?
சொல்லண்ணா துயரம் எதுவும் இல்லை
சும்மாவே அப்படித்தான் என்கிறார்கள்.
குடிசாலையில் வணக்கம் வைத்து எதிர் அமர்ந்தால்
தலையை கவிழ்த்துக் கொள்பவன்
வீடு சேரும்வரை
யாரையோ காரி உமிழ்கிறான்.
சரியாகிவிடும் என நம்பிக்கை தரும்
மருத்துவன்போல
அரவணைத்துக் கொள்கிறது அவனது நாளை.
இப்படியே போனால் எப்படி என
உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்
ஒரே பதில்தான் சொல்கிறான்
நாளை கதையை நாளைப் பார்க்கலாம்.
- வாலாட்டிக் கொண்டிருக்கும் பட்டம்
உணவு தட்டு முன்
சமிக்கைக்கு அமரும்
கழுத்துப் பட்டை நாய்குட்டியென
மந்திரத்தை கட்டிச் சென்றுவிட்டாய்
ஒவ்வோர் பொழுதும் வந்து மறைக்கிறதுன் அலைமுடி.
செவிட்டு மூடனுக்கு எதைச் சொல்லி புரியவைக்க?
உன் திசையில் பறக்கும்
வேறுகால காற்று
புத்தம் புது இசையில் வடிந்து கொண்டிருக்கிறது.
அலைவுறும் பகடையென
மேகதிரளில் சாட்சிகளாக கிடக்கும்
மின்னணு சட்டகமிட்ட புகைப்படங்கள்
கொன்று தின்கிறது கோடை மாம்சத்தை.
அப்பேரகசியத்தின் கடவுச் சொற்களை
பால்வீதியில் வீசிவிட்டேன்.
ஆசுவாசம் திரள,
இருவரும் இறுதியாக சென்றமர்ந்த பெஞ்சில்,
தனியாக ஒருமுறை படுத்துறங்கிவிட்டு வந்தேன்.
முன்பொறுமுறை செலவழித்த பயணச் சொற்களை
ஞாபகமிட்டு வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு தனிப்பயணத்திலும்
அதை உதிர்த்துவிட்டு பறக்கவிட வேண்டும்.
ஆமாம், பறக்கவிட வேண்டும்.
உயரத்தில் வாலாட்டிக் கொண்டிருக்கும் பட்டத்தை
கத்தரித்துவிடுவதற்கு
முற்றித் தொலையட்டும் காலஞானம்!
- யாருக்கோ சேர வேண்டிய ஒன்று
பெரிய மவுனத்துக்குப் பின்
உடைந்து அழ காத்திருப்பவளை
இரண்டு குற்றச்சாட்டுகளுடன் சந்தித்தேன்.
அந்த குற்றச்சாட்டுகள்
அந்த நேரத்துக்கு பொருத்தமற்றது.
அவள் உடைந்து அழ போதுமானதாக இருந்தது.
சிறிது நேரத்துக்குப் பின்
சொல்லு, அப்புறம் என்கிறாள்,
சற்றே ஆசுவாசத்துடன்.
பெறுதலை போல் இல்லை
அளித்தல்
உங்கள் கைகளைக் கேளுங்கள்.
யாருக்கும் சேராத ஒன்றை
ஒளித்து வைத்திருக்கிறது.