1
தக்கையின் வெளித்தள்ளலில்
கண்ணாடிக் கிண்ணங்களுக்குள்
சுருண்டு படுத்துக் கொள்ளும்
செந்நிறச் சர்ப்பம்
மெல்ல மெல்ல விஷமேற்றுகையில்
நடனமாடிக்கொண்டிருக்கும்
வெண்நிற ஆவி
தளும்பும் தேநீர்க் கோப்பையை
சியேர்ஸ் சத்தத்துடன் முட்ட
தேவன் அவதரிக்கிறார்
சிவப்பு ரத்தம் குடித்த
வௌவால் மனிதர்கள்
கிறிஸ்துவுக்கு முன்னரே
உயிர்ப்பிக்கக் கூடும்
மீண்டும் நடனமாடும் ஆவியுடன்
சூரியனும் நானும் விழித்த பின்னர்!
*******
2
ஏக்கம் தின்று செரித்தவளையும்
காதல் மென்று புசித்தவனையும்
முட்கரண்டியின் சப்தத்தில்
சம்பாஷிக்க வைத்திருக்கும்
கேக் துண்டொன்றிற்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
வைனின் அளவு
ஆணுக்கும் பெண்ணிற்கும்
வேறு வேறு அளவில் போதையேற்றுமென்பதை…
*******
3
இசையை ஒழுக்கிக் கொண்டிருக்கும்
பீத்தோவனின் பியானோவை
தனது கூரிய முள்ளால்
குத்திச் சரிசெய்யும்
கிராமபோன்
கசந்திருக்கும் மனதுடையவள்
அதரங்களில் கசப்பூட்டும் வைனுடன்
எரிச்சலூட்ட
வெடித்துச் சிதறும் கண்ணீர்
உதட்டுச் சாயத்தில் சிவப்பாகி
குவளைக்குள் தற்கொலை நிகழ்த்த
கலங்கித் தெளிகிறது
ரெட் வைன்!
*******
4
இறுதியாக
மன்னியுங்கள் பிதாவே
குருதியைக் கிண்ணங்களில்
நிறைத்துப் பருகிக் கொண்டிருக்கிறார்கள்
பாவிகள்
பன்னீரால் அவர்களின்
பாவங்களை கழுவுங்கள்
பனிப்பொழியும் நடுநிசியில்
மாட்டுத் தொழுவத்தில் பிறந்திருக்கிறீர்
என் சட்டைப் பைக்குள் மீதமுள்ள
சிகரட் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள்
குளிருக்கு நல்லதாம்
நடனமாடும் பாவிகளில் ஒருவன் கூறினான்
விஸ்கியுடன் இராப்போஷணம்
மட்டுமே எடுத்துக்கொண்டேன்
பாவிகள் நடனமாடுகிறார்கள்
குருதியாய் வைன் வழிகிறது
அவர்களை மன்னியுங்கள் பிதாவே