-
பறப்பதற்கான யோசனைகள் எதுவுமில்லை
நெடுஞ்சாலையோரம் கண்டெடுத்த சிறு கல்லை
அதிலுள்ள கரடுமுரடான பாதைகளை
மறக்கவியலாத இவ்விரவின்மீது
அழுந்தத் தேய்த்து
ராவுகிறேன்
அகால வேளைகளில் எழுதிப் பார்த்த
பழிச் சொற்களாய் தனித்திருக்கும் சொற்ப வெளிச்சம்
காலடியில் காத்துக் கிடக்கிறது
எதற்கோ
இன்னும்
ஒளி பாவாத மெத்தனங்களைக் கூழாங்கற்களாக்கிடும்
முயற்சியின் குறுக்கே
வழிமறித்து நிற்பதின் பயனறியவில்லை
அஞ்ஞாபகங்கள்
மேலும்
அகலத் திறந்துவைப்பதற்கான ஜன்னல் ஒன்றை
கனவு காண்கிறேன்
இப்போதும்
****
-
நச்சுப்பனி காலம்
செவுள்கள் திணற
மீன்களாகித் துடித்திட அனுமதியளித்த
சுவரில்
மழைநீர் வழிந்திறங்கும் கோடுகளின் நுனியில்
தொடங்குகிறது
வீடெனும்
அறை
கசடுகள் மண்டிடும் அன்றாட நெருக்கடிகளை
விளிம்பு ததும்ப விலக்கிக்கொண்டு
மிதந்து நகர்கிறோம்
வாசல்வரை
பிறகு
வீதியெங்கும் புலம்பல்களோடு
முன்னும் பின்னும் நாதியற்று
அலையடிக்கிறது
உயிர் சக்கை
****
-
சரிதான் வா..
குரல் எக்கி அழைத்தபோது எங்கோ இருந்தாய்
திசைகளில் குழப்பமில்லை
பசியின் பாய்மரம் காற்றை நிரப்பிக்கொண்டு
வானில் பறந்தபோது எய்த அம்பில்
பொத்துக்கொண்டு
வீழ்ந்த ஈத்தேன் மடுவில்
கனிகள் சிதறின முதலில்
இறங்கி விரைந்த நீர்ப்பாதங்களைத் தொற்றிய
விதியின் தலைமயிர்
ஆங்காரமாய் குரல் எக்கி அழைத்தபோதும்
கடல் வனத்தின் கிடுகிடுப்பிற்கும்
அப்பால்
வேறெங்கோ இருந்தாய்
****
- நிலைகளை உண்ணும் கறையான்
மறுப்பது என்றாகிவிட்ட பிறகும்
காலிங் பெல்லை அழுத்துவதில் தயக்கம் என்ன
வியாக்கியானங்களோ வாய்ச்சவடால்களோ
தூண்டிவிடும் என்றா காத்திருந்தீர்
விவாதப் பிழைகளோடு அச்சடிக்கப்படும்
பிட் நோட்டீஸ் எதையும்
பரிசீலனை செய்து பார்க்கும் யோசனை கூட
கிடையாது
தெருச்சண்டையென கட்டிப்புரளும் மல்லுக்கட்டுகளின்
உத்திகளை அறிந்து வைத்திருந்தாலும்
அவை
உபயோகப்படப் போவதில்லை
டே…..ய்ய்ய்.. என்றே
பேட்டையதிர அலறிக்கொண்டு
கைகளில் அடவு பிடித்து காற்றில் கட்டுகிற வீட்டுக்கு
கதவு எதற்கு