cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 26 கவிதைகள்

வருணன் கவிதைகள்

வருணன்
Written by வருணன்

  • தேவகுமாரன் தச்சனாய் இருக்கிறார்

நானும் கடவுளும் கதைக்கையில்
உன்னைக் குறித்த பேச்சுதான்
இச்சைக் கனிகள் மிகுந்த வேட்கை மரங்கள்
உன் வனம் முழுவதும் நிறைவது குறித்து
தனது வருத்தங்களை பதிவு செய்தார்.
எத்தனை முறை ஒளியாய் தனது பிரசன்னத்தை
நிறுவ முயன்றாலும்
ரகசிய இருள் போர்த்தி
முட்டுக்கட்டை இடுகிறாயாம்
சலித்துக் கொண்டார் தேவகுமாரன்.
காத்துக் களைத்து உன் வனத்தின்
ஒரு மரத்தையே வெட்டி
தனக்கான சிலுவையை தானே செய்வதில்
மும்முரமாகிறார்.
சகலத்தையும் பார்த்திருக்கிற நீயோ
கண்ணாடி முன் நிற்கும்
எனைப் பார்த்து நகைக்கிறாய்.


  • அது வேறு மழை

சாம்பல் நிறத்து மழை
செயற்கையின் புழுதி கழுவி
இயற்கையைக் குளிப்பாட்டுகிறது.
புகைபோல் கிளர்ந்து நெளிந்து
காற்றின் இசைக்கேற்ப
அந்தர நீர் நடனம்
பிஞ்சுக் கரங்களில் விழுந்து அவிழும்
திவலைகள் முகத்தில் ஓவியம் தீட்டுமாறு
சாரலை ரசிக்கும் மகள்
மனத்திரையில்
நிரம்பிய வாகன நெரிசல்
மழைக் கோட்டுக்குள் ஒளிந்து கொள்கிற முகங்கள்
அவரவர்கேயான காரணங்கள், அவசரங்களோடு
தற்செயலாய் தொடுகிறது பார்வை
சிமெண்ட் குழாயினுள் ஒண்டும்
வீதியோரத்துச் சிறுமியை
ஒரு மகளுக்கு இசையான மழை
இன்னொருவளுக்கு வதையாவது புரிகிறது
முகத்தில் வழியும் துளிகள் கனக்க.


  • மூன்றாம் நண்பன்

சுட்டெரிக்கும் நண்பகலில்
பணிகள் முடித்து
ஈருருளியில் அமர்ந்திருந்த வெயிலின் மீது
கவனியாது அமர்ந்த கணத்தில்
அலறினோம் இருவரும்
ஒருசேர
நகர்ந்து இடமளிக்கக் கூட மனமற்ற
வெம்மையை வசைபாடியபடியே
துவங்கியது பயணம்
அனல்காற்று முகமறைந்து சொன்னது
தன் மீது அமர்ந்து கொள்ள
அனுமதித்த கருணையை
இப்போது மூன்று நண்பர்களாய்
பயணத்தைத் தொடர்கிறோம்.


  • காலியான வீடு

வீழ்ந்துகிடந்த கருவேலத்தின்
உள்வளைவில் பத்திரமாய் இருக்கிறது
அந்த காலியான கூடு
ரீங்கரித்துச் சுற்றுகிறது வெளியேறியிருந்த
பறவையின்
முணுமுணுப்பான கானம்
ஒரு காலியான வீடு
தருகின்ற அதே சங்கடத்தைத் தருகிறது
அந்த காலியான கூடு.


கவிதைகள் வாசித்த குரல்:
  வருணன்
Listen On Spotify :

 

About the author

வருணன்

வருணன்

இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website