-
அரச ரயில்
ரயில் வருவதாகச்
சொல்லி
ஊரை தண்டவாளங்களால்
இரண்டாகப் பிரித்தார்கள்.
முதன் முதலில்
ரயிலைக் கண்டபோது
சிக்குப்புக்கு கூவியபடி
கொஞ்ச தூரம்
ஓடிக் களைத்துப் போனேன்.
ஊரையும் என்னையும்
அதிசயமாகப் பார்த்து
கையசைத்துப் போன பயணிகளுக்கு
புன்னகையைத் தவிர வேறு எதையும் கொடுக்க முடியவில்லை.
இறந்துவிட இலகுவாக
தண்டவாளத்தில் தலை வைத்த
ஊரவர் உடலை பாயில்
சுருட்டி கட்டுகையில்
சல்லிக்கல்லை மட்டுமே
முறைத்துப் பார்க்க முடிந்தது.
சத்தங்களை
ஊருக்கு மிச்சம் வைத்துப் போகும்
அரச ரயில்
அவ்வப்போது
யாரோ ஒருவரின் மலத்தையும்
ஊர் மண்ணில் விட்டுத்தான் செல்கிறது
இவர்கள்
பழகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில்.
-
குளம்
கரப்புக்குள் சிக்கிய
விராலின் துடிப்பில் குளம் கண்கலங்க
விம்மி விம்மி
ஏங்கித் துடித்தழுதன
நீர்த்துளிகள்
சுரிக்குள் புதைந்து தூக்கும் காலில்
சுற்றிக்கொண்ட
தாமரைக் கொடிகள் பிரிவுத் துயரில் கத்திக் கதறியழுதன
திக்கித் திணறி
ஓடிய மீன்கள்
புல்லையும் புதரையும்
அரண்களாக்கி
மூச்சுப் பேச்சற்று
பதுங்கிக் கொண்டன
தொம்பலில் புதைந்த கரப்பை இழுத்து
அலசிக் கழுவி கரையேறும் போது
மீன்களின் பாரம்
தாங்க முடியாத
குளம் கேட்டது
நாளைக்கும் வருவாயா என்று.
-
நீயும்
நேற்றைய இரவின் கடைசி நொடியில் அவள் என்னை எழுப்பினாள்
மலர்ந்த வாசனை மரங்களுடன் உடல் முழுதும் படர்ந்து கொண்டது.
படுத்த பாயைச் சுற்றி அசவில் வைக்கும் தருணங்களில்
மீதி ஆசைகளையும் நாளை என்று
தள்ளிப் போடுவதே வழமையானதாக இருக்கும்.
மின்சாரக் கம்பிகளில் உட்கார்ந்து
திசை தெரிவு செய்யும் பறவைகளின்
நிலையாகி
வீதி ஓரத்தில் குந்திக் கொண்டு இருக்கிறேன்.
தேவை உடையவர்கள் வரவு
வாழ்வாகி உச்சி குளிர வைத்து
என்ன கட்டளை என்றாலும்
ஏற்று நடக்கிறது ஆசைகள்.
செலவு போக மீதி சேமித்து
எதோ ஒருநாள்
விடிந்தும் உறங்கி
அரவணைப்பு தேடும் ஆசையை முற்றுப் பெற
வைக்கும் போது
சோம்பேறி என்று மட்டும்
என்னைச் சொல்லி விடாதே
என் வாசகர்களுடன்
நீயும்.
சூப்பர் கவிதைகள் நண்பா…. நமது ரயில் மலமிடும் காண்டாமிருகம் என்பதை நாமே அறிவோம். குளம் பிடித்தமானது.