-
பத்திரமாக
எதிர்பாராத தருணங்களில்
வீசிடும் கேள்விகள்
அலாதிப் பிரியமாகவும்
அதனூடாக
பெரும் அச்சமாகவும்
ஊற்றெடுக்கும்
பதில் இல்லாத
கேள்விகளையே
தொடுப்பாய் – அல்லது
விரும்பிடும் பதிலை
நேரடியாகக் கூற முடியாத
கேள்விகளை
சமயங்களில்
இன்ன கேள்விக்கு
இன்ன பதில்தான்
எதிர்பார்க்கிறாய் என்றறிந்தும்
ஐம்புலன்களில் உணர்ந்தும்
நீ ~ நானுமே
விரும்பாத வேறொன்றை
விடம் தடவிய
கூர் கத்தியின்
லாவகமான மென் கீறலையொத்த
பசையில்லாத பதிலை
உந்தன் மார்பில் செருகிய கணத்திலும்
நீயே தொலைத்துவிட்ட உன்னையும்
நானே இழந்துவிட்ட என்னையும்
பத்திரமாகவே வைத்திருந்தேன்
பதில் இல்லாத
கேள்விகளில் தான்
வாழ்ந்திருக்கிறது
நீயும் நானும்
நாமுமான காதல்
-
நிகழ மறுத்த அற்புதம்
என்னிலேயே தங்கிவிடும்
சில வார்த்தைகளுக்கு நீ
பொறுப்பாளியாக
முடியாது
உன் நிழலின்
இருண்ட நிழலில்
கதகதப்பாய் நகர்ந்திடும்
மனதைக் கிழித்து
உந்தன் பட்டத்திற்கு
வால் செய்ய வேண்டுமா?
இருளுக்குப் பழகிவிட்ட
கண்களில்
ஒளி பிறக்கிறது
-
சொர்க்கத்தில் நல்லவனுக்கு இடமில்லை
ஏன் ஒரே மாதிரி இயங்குகிறாய்
எந்திரமோ விலங்கோ
அல்லவே நீ!
வித்தியாசமாக உடுத்து
வித்தியாசமாகச் சிந்தி
வித்தியாசமாகச் செயல்படு
வித்தியாச வித்தியாசமாகப் புணர்
இமைப்பதிலிருந்து இறப்பது வரை
வித்தியாசப்படு
உன் வானில்
சூரியன் மேற்கில் உதிக்கட்டும்
சந்திரன் கிழக்கில் அஸ்தமிக்கட்டும்
பகலில் இருட்டட்டும்
இரவில் வெயில் பொழியட்டும்
மழைக்கு வண்ணம் சேர்
கடலை கண்களுக்குள் அடை
கண்ணீரில் இனிப்பைத் திணி
அன்பு ஒரு சாதனம்
நீயியக்கு
புத்தனாக ஆசைப்படு
மரணம் வரட்டும்
நரகம் செல்லலாம்
சொர்க்கத்தில் நல்லவனுக்கு இடமில்லை
நரகத்தில் மனிதனாக வாழலாம்
மிகவும் பாராட்டுக்குரிய வரிகள்.. வாசிப்பு மிகவும் அற்புதம்…