cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

வீரசோழன் க.சோ.திருமாவளவன் கவிதைகள்


1.

ஒரு தனிமையின்
தீராத் துயரம்
அழுது அழுது
தீர்க்க முடியாதது.

அழுகையின் துளியும்
விதையை நடுமானால்
பறவைகளும்
தங்கும் விடுதியாகின்றன
ஒற்றைத் தோணி.

தனிமையின்
நாட்காட்டி
துயரை மட்டுமல்ல
வாழ்வதையும்
மெல்ல
கற்றுத்தருகிறது.


 

2.

ஆர்மோனியப் பெட்டி மீது
மிதக்கும் காற்றில்
கை விரல்கள்
ராகத்தை இசைக்கின்றன.

மௌனத்தில்
ராகங்கள் பேசும்
இன்பத்திலும்
சோகங்கள் பாடும்.
சோகத்திலும்
இன்பம் இசைக்கும்.

மீட்டாத வீணையில்
வழியும் கண்ணீரின் அளவு
ராகத்தில் எடை செய்வதில்லை.

நகரும் விரலில்
கட்டைகளின் இடப்பெயர்ச்சி
ராகத்தை காற்றில்
தவழ விடும்.

இன்னிசையோ
விரலிசையோ
மீட்டும் வரிகளில்
பூபாளம் மீட்டும்.

வறுமையின் கீதத்தை
ஆர்மோனியங்கள்
சட்டை செய்வதில்லை.

சங்கீதம் என்பது
நோட்ஸ் அல்ல
இதயத்தின் குமுறல்.


3.

படித்துறையில்
அவள் கால் வைத்ததும்
வரவேற்று
முத்தமிட்டுக் கொஞ்சுகின்றன
மீன்கள்.

பாதங்களைக் கழுவி
பரிசுத்தமாகின்றன
ஆற்றுநீர்.

மெதுவாய் உள் இறங்க
ஆற்றுப் படுகை
ஆழத்தை உயர்த்துகிறது
அவள் அழகைக் காண.

முழுவதாய் தன்னை
ஆற்றுக்குள் நுழைத்ததும்
அவளழகை ஆசை தீர
கட்டியணைத்து
தரிசனம் செய்து கொள்கிறது.

வெட்கத்தோடு மேலேழும்புகிறாள்
அவளை அணைத்த நீர்த்துளிகள்
ஆற்றில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டன.


4.

இலையுதிர்காலத்து பாடலை
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வசந்தங்கள் உருகி வழிந்ததை
மைத்துளிகள் நடனமாடிக் கொண்டே நனைத்து விடுகின்றன.
நனைக்க நனைக்க பெருமழையொன்று பேயாட்டம் ஆடுகிறது.
ஆலங்கட்டி மழை பொத் பொத்தென்று விழுகிறது.
விளையாட்டு காட்டி மகிழும் மழைக்கு
ஒரு மழை போதுமா?

வசந்தகாலத்தை வரைந்து கொண்டிருக்கிறேன்
பறவைகள் எச்சத்தை இட்டு நிரப்புகின்றன
ஒவ்வொரு எச்சத்திலும்
வனமொன்று பூக்கிறது.
பறவையின் இறகில் மைல் கல் தொலைவை அளக்க முடியுமா?

எல்லாவற்றையும் அழித்து விடுகிறது மழை
எல்லாற்றையும் அணைத்துக்கொள்கிறது பெரும் மரம்.

இலையுதிர்காலத்துப் பாடலொன்று முடிவடையும் நேரத்தில்
நான் இல்லாமல் போகலாம்.


கவிதைகள் வாசித்த குரல்:
உதயகுமார்
Listen On Spotify :

About the author

வீரசோழன் க.சோ.திருமாவளவன்

வீரசோழன் க.சோ.திருமாவளவன்

தென்காசி மாவட்டம் அருகன்குளம் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்டவர் வீரசோழன் க சோ.திருமாவளவன். இன்றைய இலக்கிய உலகிலும் பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மொரீசியஸ் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வையாபுரி பரமசிவம் பிள்ளை அவரிடமிருந்து தனது கவிதைக்காக முதல் பரிசு பெற்றுள்ளார்.

“ இவரின் கவிதைத் தொகுப்பு நூல்கள் “பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை” மற்றும் "புத்தனை புனைபெயர் ஆந்தை"

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website