- காமம் மற்றும் காடு
கண்களில் சிவப்பேறிய ரப்பர் மரத்தின் முன்பு
உலகக் கலவிகளின் ஒப்பந்தத்தைக் கிழித்துவிட்டு
மடைத் தளர்த்தி
குழியமர்த்தி
குறுவாள் ஒன்றால் கழுத்துப் பகுதியென அனுமானிப்பதைக் கீறிப்
பின் பிசுபிசுக்கும் திரவத்தால்
காடெங்கும் பூக்கச்செய்
தீண்டியவுடன் தீண்டும் பூக்களவை
முன்பெப்போதும் இல்லாத நெடியது
நீயொரு காடு
அது
உன் காட்டு வாசனையென கொள்
உடலின் வாசல் காடுகளைக் காட்டுகிறது
புறவாசல் பிடரி
ஓராயிரம் தேனீக்கள் இதழ்களில் கூடுகட்டுகின்றன
நீண்ட உணர்கொம்புகளின் மீது தேன்துளி வழிகிறது
கருங்கல் போன்ற கூர்மையான முத்தங்களால் தேனீக்கள் சிதறடிக்கப்படுகின்றன
பற்கள் தடைக்கோடு
அதிர்ந்து பறக்கும் தேனீக்களின் இசையில்
நடுங்குகிறது காடு
அது
அடுத்த நகர்விற்கான அழைப்பு
போதை தரும் இலைகள் எங்கிருக்கின்றன என்று கேட்கிறேன்
நீயோ வேர்களைக் காட்டுகிறாய்
தடித்து நீண்ட வேர்களைத் தீண்ட ஆழத்தில்
புதைய வேண்டியிருக்கிறது
மூச்சுத்திணறலில் நாசியில் மணல் பூக்கிறது
பூக்கப்பூக்க உதிரும் மணல்
உதடுகளைப் பிரிக்க மனமற்று தொடங்கி
உதடுகளை பூட்டிக்கொள்ள மனமற்று மடியும் மயக்கம்
இது
தொலைவதற்கென வாக்களிக்கப்பட்ட காடு
சொற்களால் நிறைக்கப்பட்ட காட்டில்
காமம் உச்சிக்கிளையெனும்
பெயரில்
உலவும் மொத்தக்காடு
-
இன்னொரு புத்தன்
உலகமயமாக்குதல் செய்யப்பட்ட
ஓர் ஆணுறைக்குள்
புனிதத்தன்மை தேய
உறங்கி கொண்டிருக்கிறான்
இன்னொரு புத்தன்
காலாவதியான அந்த குப்பையை
கூர்மையான கம்பியால்
குத்திக்கொதறி சேகரிக்கிறான்
இன்னொரு புத்தன்
மொத்த நெகிழிக் குப்பைகளை
கொள்முதல் செய்து
அழித்தொழித்து புதிய சாதனம்
செய்கிறான் இன்னொரு புத்தன்
இன்னொரு புத்தனை
பெண்கள் இதழ்களில் பூசிக்கொள்ளும்போது
ஆண்கள் புகையாக இழுக்கின்றனர்.