-
உடலெங்கும் மூக்குகள்
சில்வியா பிளாத்
பக்கத்து பிளாட்டிற்கு குடி வந்திருந்தாள்
அவளது உடைமைகளில்
ஆயுதங்களே அதிகமிருந்தன
தந்தையின் பிணத்தை
இன்னும் அப்புறப் படுத்தாதவளுக்கு
உடலெங்கும் மூக்குகள்
சமாதானத்தை இப்போது அடியோடு
வெறுப்பதாகச் சொன்னாள்
தற்கொலையின் ருசி
அவள் சொல்லித்தான் தெரியும்
சாவை ஒரு கவளமாக்கி
மெல்ல ருசித்தாள்
அவளது தொட்டிச் செடிகளுக்குள்
எண்ணமுடியாதபடிக்கு
கூழாங்கற்களைப் பார்த்தேன்
மறுநாள் காலையிலிருந்து
அவளைக் காணவில்லை
மெல்ல அறைக்கதவைத் திறந்து பார்த்தேன்
மிச்சமிருந்தன ஒரு கவளச் சோறும்
ஆயுதங்களும்
-
மழையிடம் போய்விட்டாள்
மழைக்காலத்தில் பறக்கும் தட்டான்களுக்கு
ஊசிப்பூச்சி என்று பெயர் வைத்திருந்தேன்
அவற்றோடு சேர்ந்து பறப்பதும்
களைத்துப்போய் மல்லிகைச்செடியில்
அமர்வதுமான நாட்கள்
குலைநடுங்க வைப்பதற்கென்றே
இடியும் மின்னலும்
போட்டி போட்டுக் கொண்டு வரும்
அர்ச்சுனா அர்ச்சுனா
ஆத்தப் பத்து அரசப் பத்து
என்று சொன்னால்
இடி தூரப் போய்விடும்
என்பாள் அப்பத்தா
மழைத் தண்ணீரைப் பிடிக்க
பாத்திரங்களைத் தயார் செய்வாள்
காகிதங்களைக் கப்பலாக்கித் தருவாள்
பொறியோடு கடலையும்
சீரகமும் மிளகாயும் சேர்த்து
வறுத்து கடுங்காப்பியும் தருவாள்
பொழுதோட வந்த மழையும்
ஒரம்பரையும் சாமானியமாப் போகாது
என்று சொலவடை சொன்ன அப்பத்தா
மழையிடமே போய்விட்டாள்
மேகம் மஞ்சள் பூசிக் கொண்டது.