-
ஷூக்கள்
செருப்புகள் வாங்க வக்கில்லாத காலத்தில்
ஷூக்களை கனவு கண்டேன்
ஷூக்கள் அணிந்த கால்களின் பின்னால்
நாய்போல் முகர்ந்து ஓடினேன்
காலத்தின் மேல் என் கால்கள் நின்றபாடில்லை
புழுதி படிய அலைந்து திரிந்தன
முப்பது வயது மூப்பின்மேல்
மூச்சு வாங்கி நின்ற பொழுது
முதல் ஷூக்களை சொந்த காசில் வாங்கினேன்
அவதியவதியாய் அணிந்துகொண்டு
பூமியை
அதன் ஆழத்தை
அதிர அதிர நடனமாடி களித்தேன்
இதோ
என் ஷூக்கள்
நான் வாங்கி ஷூக்கள்
என் கால்களை அழகாக்கி இருக்கின்றன
நடக்கிறேன்
குதிக்கிறேன்
ஓடுகிறேன்
மகிழ்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை
பொய் ஷூக்களை அணிந்து
ஆயிரக்கணக்கான இரவுகள் வீணடித்திருக்கிறேன்
என்னால் உண்மையாக நம்பவே முடியவில்லை
நான் இப்பொழுது அணிந்திருக்கும்
இந்த ஷூக்களுக்காக
முப்பது ஆண்டுகள் செலவழித்திருக்கிறேன்
இந்த பெரிய எண்கள்தான்
என்னை சோர்வடையச் செய்திருக்கின்றன
மற்றபடி
என் ஷூக்களை கட்டிப் பிடித்து
அப்படியே உறங்கிப்போனது
உங்களுக்கு ஒரே தமாஷாக இருக்கும்.
-
உறுமி
அப்பா அவளை துன்புறுத்தாதே
கொஞ்சம் சில்லறைகளை போட்டு வைத்திருக்கிறேன்
இப்பொழுது அவள் நிறைய கனமாகிவிட்டாள்
மெதுவாக குலுக்குங்கள்
உள்ளே அவளுக்கு வலியெடுக்கும்
நான் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறேன்
நான் தங்கை தூக்குவதுபோல்
அவள் தன் வயிற்றுக்குள் காயினை சுமக்கிறாள்
ப்ளீஸ் அப்பா
அவள் முதுகை லேசாக தட்டி பணத்தை எடுத்துத் தருகிறேன்
தயவு செய்து என் முன்னால்
அவளைப்போட்டு உடைத்துவிடாதீர்கள்
அவள் பாவம்
என்னைப்போல் ஒரு சிறு பெண்
அப்பா பலமாய் சிரித்தார்
அவர் கேட்பதாக இல்லை
உறுமி அழாதே
அப்பா உன்னை வலிக்காமல் உடைப்பார்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே
ட மா ர்
அவள் இதயத்தின் வழி கண்ணீர் இறங்கியது
சில்லுச் சில்லாய் தெறித்துக் கிடந்த
அவள் பாகங்களை பொறுக்கியெடுக்கும்போது
பிரமாதம் friend எனக்கு வலிக்கவேயில்லை
அப்பா என்னை வலிக்காமல் உடைத்தார்
என்றொரு குரல் மட்டும்
எங்கிருந்தோ நசுங்கி ஒலித்தது