மேலே சொருகும் பசியின் கண்கள்
நடுப்பகல் வெக்கையில் ஊடாடிச் சோர்வுறுகின்றன.
வாசல் கதவுகள் அகலத் திறந்த நிலையில்
கூடத்தில் பாய்ந்த வெளிச்சம்
குவிக்கப்பட்ட அழுகல்களைக் காட்சிப்படுத்துகிறது.
தோற்ற மாயை தருவிக்கும் தருணங்களின் எண்ணிக்கை
அதிகமாகிறது.
வார்த்தைகளைப் புறந்தள்ளி
அனுதாபங்கள் கரைக்கும்
ஒரு பார்வை தந்து விட முடியும்
சில தெருக்கள் கடந்து
மரத்தில் மிச்சமிருக்கும்
இலை ஒன்று உதிர்கின்றது
நீயிருக்கும் திசை நோக்கி
****
விடைபெறாதது குறித்தெல்லாம் வருத்தப்படத் தேவையில்லை
ஈமச்சடங்குகளில் குழப்பங்கள் இருக்கப் போவதில்லை
சிதையின் சாம்பல் காற்று கரைக்கும்
மிச்சமான எலும்புத் துண்டுகள் அவசரமாய்
அப்புறப்படுத்தப்படும்
நிலுவைத் தொகையையும் மீதமிருந்தவற்றையும்
என்ன செய்வதென்று அறிந்திருப்பீர்கள்
குறிப்பாக இறப்புச் சான்றிதழ்.
தாழ்மையான ஒரே ஒரு வேண்டுகோள்:
இறந்தவரின் அலைபேசியில் சேமிக்கப்பட்ட
எல்லா எண்களையும்
சோதித்துவிடுங்கள்
குறைந்த பட்சம்
****
- மிக நீண்ட தூரம்
விருப்பக்குறியும் நிலைத்தகவலும்
இருத்தலைத் தெரிவிக்கும்
காலமிது
இறப்பில் தொடங்கி
இறப்பில் முடியும்
இந்நாட்களைக் கடப்பதற்கு
கள்ளச்சாவி ஏதேனும் உண்டோ?
எங்கெனவும் இருக்கும் காற்று
நிரப்ப முடியாத பிடிமூச்சு
எண்சாண் உடம்புக்கு நுரையீரலே பிரதானம்
காற்றின் உருவம் என்னுயிர்
இவ்வுலகின் மிக நீண்ட தூரம்
மூக்கிலிருந்து நெஞ்சாங்குழி வரை