cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

கதிர்பாரதி கவிதைகள்


  • இருவர் விளையாடுகிறார்கள்

மாநகரப் பூங்காவின் வடமேற்கு மூலையில்
இறகு பந்து விளையாடுகிறார்கள்
இருவர்.
புள்ளிகளின் எண்ணிக்கை கவலையற்று
விளையாட்டில் லயித்து
எதிர்பக்கம் பந்தை அடித்தடித்து விளையாடுகிறார்
இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதெனில்
பந்துக்களைத் தடுத்தாடுவதில் சிறிது அலைக்கழிகிறார்
இவருக்கு
கிராமத்தில் சொந்தமாக நிலம் இருக்கிறது.
அதைச் செப்பனிட்டுப் பயிர்செய்து பராமரிக்கும்
தாய்தந்தை இருக்கிறார்கள்.
ஊருக்குப் போகும்போது மறவாமல்
நிலத்தின் நலம் பராமரித்துவிட்டு வருகிறார்.
கூடவே சில விதைகளை எடுத்துவந்து
தன் சிறுதோட்டத்தில்
விதைத்து மரமாக்கிப் பராமரிக்கிறார்
அதில் சில பறவைகள் வசித்துவருகின்றன.

இன்னொருவர்
எதிராளியைத் திணறடித்து
புள்ளிகளைக் குவிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.
பந்து தவறும்போது பதற்றத்தில்
அவர் முகத்தசை இறுகுகிறது.
பந்தை எதிர்ப்பக்கம் அடித்து விரட்டும்போது
விதியின் அனுமதிக்கப்பட்ட
சில குயுக்திகளைப் பிரயோகிக்கிறார்.
இவர் பக்கம் புள்ளிகள் அதிகமாகக் குவிகின்றன.
இவருக்கு
பன்னாட்டு நிறுவனமொன்றில்
மனித வள மேம்பாட்டுத் துறையில் மேலாளர் பணி.
உதட்டில் உறையவைக்கப்பட்ட புன்னகையோடும்
உள்ளுக்குள் பற்களைக் கடித்துக்கொண்டு
மிக லாகவத்தோடும் இன்முகத்தோடும் பணிபுரிகிறார்.
ஆகாயம் தொடும் குடியிருப்பு ஒன்றின்
பதினான்காவது மாடியில் குடும்பம் நடத்துகிறார்.
கறுப்பு மேகங்கள் திரளும்போது
கண்ணாடியிட்ட ஜன்னல்களை இழுத்துச் சாத்திவிடுவார்.
இப்போது பாருங்கள்
இருவரும் விளையாடுகிறார்கள்.


  • பின்தங்கியவர்களின் உயரம்

உச்சியிலிருந்து சறுக்கிவருகிறார்கள் பனிச்சறுக்கு வீரர்கள்.
சறுக்குப் பாதையிலிருக்கும் மேடு பள்ளங்களை
படுவேகமாகத் தாண்டிப் பாய்கிறார்கள்.
பனிபூத்து நிற்கும் பைன்மரங்களின் கூர்மையாலான
உந்துக்குச்சிகளால் உந்தியுந்தி சறுக்குகிறார்கள்.
இலக்கு நோக்கி விரையும் அவர்களிடம்
எதிர்படும் எதுகுறித்தும் கிஞ்சித்தும் கவலையில்லை.
வழிதப்பி சறுக்குப்பாதையில் வந்துவிட்ட
அபலை முயலொன்றின் கழுத்தைக் கிழித்து நழுவுகிறது
ஒருவனின் சறுக்குப் பாதுகை.
சடாரென ஆழத்தில் இறங்கும் திருப்பமொன்றில் கவனம்
பிசகியவன் முழங்கால் முறிந்து வீழ்கிறான்.
அவன் தொண்டைக்குழிக்குள் உந்துக்குச்சை ஊன்றி
முன்னேறுகிறான் பின்வருபவன்.
அபாயத் திருப்பமொன்றில் சாய்ந்து சுழன்று
சறுக்குப்பாதையின் அச்சில் சரியாகக் குதிக்கிறானே
அவனின் மண்டையோட்டுக் கவசமும் மார்புக் கவசமும்
முன்னோக்கி நகரும் லட்சியத்தால் மட்டுமே ஆனவை.
ஓநாய்போல மூச்சிரைத்தப்படி தாவும் அவனுக்கு
இலக்கு என்பது தூரத்திலோடும் இரை.
எட்டு கஜத் தூரத்திலிருக்கும்போதே
ஒரே தாவலில் அதை வேட்டையாடிவிடுகிறான்.
இரைக்குப் பின்தங்கியவர்கள் பெருமூச்சைச் சொரிந்தபடி
மீண்டும் உயரத்தைப் பார்க்கிறார்கள்.
ஆம்
இரையை
பள்ளத்தில் தள்ளிய உயரத்தைப் பார்க்கிறார்கள்.


  • வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்

வெட்டுக்கிளிகள் பறந்துலவும் என் நிலம்
சூரியனை மறைக்கும் அவற்றின் றெக்கைகள்
பனிமொட்டுக்களில் பின்னங்கால்களை ஊன்றி
நெல்வயல்களில் துள்ளிக்குதிக்கும் அவற்றின் பருவம்…
இவை பற்றி சொல்லும்போது
அவை சாலப் பரிந்துகாட்டிய மழையின் திசையில்
பூத்த மலரை நேசித்த
வெட்டுக்கிளிகளின் ஞாபகம் முட்டுகிறது.
வெட்டுக்கிளியின் பார்வையில் வீதியுலா வந்தது சாமி
அதன் தாவணியில் பூத்தது வானின் வில்
மீசையில் ஒளிர்ந்தது நிலா பிறை
வேட்டியில் துள்ளின ஆசையின் அயிரைகள்.
விடிகாலைக் கோலத்தின் பரங்கிப்பூவில் குறிப்புணர்ந்து
மார்கழியின் அந்தியில் சிவந்து பறந்தது அதன் நேசம்
பூவரசம் நிழலில்
கரும்புத் தோகை சுணையில்
தாளடி வைக்கோல் போர் வெப்பத்தில்
அலையனுப்பி ஆம்பல்களைத் தாலாட்டும் குளத்தில்
குஞ்சுப்பறவைகள் தூங்கும் கருவேலம்கூட்டினடியில்…
வெட்டுக்கிளிகள் வெகுவாகத் தோன்றித் திரிந்த
என் நிலத்தின் சீதோஷணத்துக்கு எதிரே
வீச்சரிவாள் ரத்தம் கண்டபோது
ஒன்றையொன்றைக் கட்டித்தழுவியபடி
தாழம்புதரில் உயிரற்றுக் கிடந்தன இரு வெட்டுக்கிளிகள்.
வெட்டுக்கிளி ஒன்று நாண்டுகொண்டு தொங்கியதையும்
மற்றொன்று சூப்பர் மேக்ஸ் பிளேடால்
கழுத்தை அரிந்துகொண்டதையும் சாட்சி வைத்து
பைத்தியமாகி கிறுகிறுவெனச் சுழல்கிறது
இன்னொரு வெட்டுக்கிளியின் நிலம்.


Listen On Spotify :
குறிப்பு :
  இக்கவிதைகள்  47-ஆவது புத்தகக் காட்சியை முன்னிட்டு ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற ”நவீனக் கவிதைகள் வாசிப்புக் கூடுகை” நிகழ்வில் வாசிக்கப்பட்டவையாகும்.  நுட்பம் – கவிதை இணைய இதழுக்காக எழுத்து மற்றும் ஒலிவடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Courtesy :
கவிதைகள் ஒலி மூலம் : Shruti TV 

About the author

நுட்பம் - கவிதை இணைய இதழ்

நுட்பம் - கவிதை இணைய இதழ்

கவிதை வெளிப்பாட்டின் மூலம் ஒரு மொழியின் பன்முகத்தன்மையை வெளிக்கொணர இயலும் என்ற வகையிலும், புதிய புதிய கவிதை பரிணாமங்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களுக்கு ஒரு களமாக இந்த இணையதளம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் பொறுப்பும் நிர்வாகமும் இரா.சந்தோஷ் குமார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website