-
பூ(னை)க்குட்டி
அவள் தன் மூக்குத்தியை
மாற்றிப் பார்க்கிறாள்.
தலைமுடியைக் கத்தரித்துப் பார்க்கிறாள்
ஒவ்வொரு உடையாக அணிந்து
பார்த்து அதிருப்தியில் முகம் சுருக்குகிறாள்.
பிரியத்தின் நிழல் விழாத
சலித்துப் போன தன் வாழ்வை
புதிதாக்க என்னென்னவோ செய்து பார்க்கிறாள்
நம்பிக்கைகள் அனைத்தும்
தளர்ந்து
கடற்கரை மணலில் தனியாக
விசும்பிக் கொண்டிருந்த
அவள் மடியில்
எங்கிருந்தோ வந்து அமர்ந்த பூனைக்குட்டியொன்று அவள் கைவிரல் பற்றிக் கொண்டது
மரம், செடி, கொடி, வானம், நீலம்
என உலகின் அத்தனை சந்தோஷங்களையும் கைகாட்டியது.
காசு, பணம், வேலை, காதல், உறவுகள், அங்கீகாரம் மட்டும் தான் வாழ்க்கை என்கிற மாயை தகர்ந்தது.
-
முத்தம்
மனங்களைப் பிணைக்கும்
பயணமொன்றில்
மிக உயர்ந்த மலையுச்சியில்
கரணம் தப்பினால் மரணம் என்று திகிலுடன்
கீழே சரிந்து கிடந்த பள்ளத்தாக்கைப் பார்த்துக் கொண்டிருக்கையில்
வாடைக் காற்று வாரியணைக்க
மழைச் சாரல் ஆசிர்வதிக்க
என் தலைமுடி பற்றியிழுத்து
நீ கொடுத்த முதல்
முத்தத்தின் வழி முழுமையாக இறங்கி
என் ஆன்மாவிற்குள் நுழைந்தாய்
கலைடாஸ்கோப்பின்
வண்ண ஒளிச் சிதறல்களாய்
வசந்தம்
என் வாழ்க்கையில்
உள்நுழைந்தது.
இனி நீ வேறு நான் வேறு அல்ல
-
பிரபல காதல்
சமூகத்திற்கென நேர்ந்து விடப்பட்ட
ஒரு பிரபலத்தைக் காதலிப்பது
தனிமையிலிருப்பது போல் தான்
அழைப்புகள் முழுவதுமாக
ஒலித்து அணையும் அல்லது தொடர்பு எல்லைக்கப்பால் இருக்கும்
குறுஞ்செய்திகள் பார்க்க மட்டும் படும்..
நேர்ச்சந்திப்புகள் குறிஞ்சி பூ மலர்வதை ஒத்தது..
அழைப்பு எடுக்கப்பட்டாலும் தனித்துப் பேச இயலாமல்
எதிரிகள் உடனிருப்பர்.
உலகமே தன்னால் தான் இயங்குகிறதென்கிற
தோரணையிருக்கும்..
பொதுவெளியில் புழங்க முடியாத
உயிரற்ற காதலைத் தருகிற,
அன்பிற்காக ஏங்குகிற நேரத்தில்
கைவிடுகிற பிரபலங்கள் காதலிக்கத் தகுந்தவர்கள் அல்ல