-
தீராக் காதலின் திறக்கவிருக்கிற கதவு
குடையின் கால்களை இறுகக் கட்டிக் கொண்டு
மழலையென ஊஞ்சலாடுகிறது ரிப்பன்
இல்லை இல்லை
விழப் பார்த்த ரிப்பனின் கரங்களை
கடைசிக்கு முந்தைய நொடியில்
எட்டிப் பிடித்து மீட்டிருக்கிறது குடை
இல்லை இல்லை…
இன்னுமொரு கதையும்
இன்னுமொரு கோணமும் கூடத்தான் உண்டு.
ஆனால் அது எதற்கு இப்போது
குடையைப் பிடித்தபடி நடை பழகுகிற ரிப்பனும்
ரிப்பனின் கரம் கோர்ப்பில் லயித்திருக்கும் குடையும்
தீரா காதலின் திறக்கவிருக்கிற கதவிற்கு
முன்பு நிற்கின்றனர்
கனிந்த பார்வையால் ஒருவரையொருவர் பருகியபடி.
-
ஒற்றைக் காகம்
காலத்தின் மீது நிற்க
முயன்று கொண்டிருக்கிறேன்
அது ஒரு முடிவிலி கயிறென
எங்கிருந்தோ உனைநோக்கி நீண்டுவந்து
தலைக்கு மேலே சலசலக்கிறது
ஆழத்தின் சலனமுறா அமைதியில்
கல்லென கிடக்கிறதுன் பிரக்ஞை
எனையொரு காகமாக மாற்றியிருக்கிறது
கால்கள் பற்றிக் கொண்டிருக்கும் கயிறு
அமரக் காதலர்களின் காதல்களை
எதிரொளிக்கிற ஆடிகளாய்
கண்களை ஒளிரச் செய்து
வித்தைகள் காட்டிக் கொண்டிருக்க
நீயோ பித்ருக்களுக்கான
கவளங்களை உருட்டியபடி
மெலிதாய்,
மிக மெலிதாய்
புன்னகைக்கிறாய்.
-
காதல் கதை
அலைகளுக்கு தீராத் தாகம்
மதியத்து வெயிலை
கரைகளுக்கு
வந்து வந்து
பருகி பருகியும்
போதாமல்
நாவைச் சுழற்றியபடி
இன்னும் இன்னும் …
அலை நானெனவும்
வெயில் நீயெனவும்
சொல்லிவிட்டால்
நம் கதையாகிவிடும்
இது
அலையின்
வெயிலின்
காதல் கதையாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்.
வலியின் வெளிப்பாடு வரிகளால் உருவெடுக்க கவிதை என்னும் உருவம் கொண்டு நின்றது …. மிக அருமை ….