cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

இரகசியத்தின் ருசி

தயாஜி
Written by தயாஜி

எல்லாவற்றையும் இங்கு
எல்லோரிடத்திலும் சொல்வதற்கில்லை
சொல்லும்படியும் இல்லை

யாரோ ஒருவரின்
இரசியங்களைத் தின்று வாழவே
இங்கு பலர் விரும்புகின்றார்கள்
அதனால்
அவர்கள் வாழ்ந்திடவும் செய்கிறார்கள்

என்னிடமும் இரகசியங்கள் உள்ளன
முடிந்தவரை அவற்றை
நானே தின்று தீர்க்க முயன்றேன்
அவற்றை மென்று செரிக்க முடியவில்லை
அவை என்னை கொன்றுவிடவே
ஆயுத்தமாகின்றன

அது எனக்கு ஆபத்தாகவும்
மாறலாம்

எனக்கும் கூடத்தான்
யாரோ ஒருவரின் இரகசியத்தின்
ருசி தேவைப்படுகின்றது

அதுதான் எத்துணை ருசி
எவ்வளவு சுவாரஸ்யமானது

அடுத்தவரின் அந்தரங்கங்களில்
உப்பு புளி காரம் என
எல்லாமே எப்பவும் சரியான அளவிலேயே
இருக்கின்றன

ஒருவேளை அவற்றில்
குறையிருந்தாலும்
ருசியில் ஏதும் குறைந்திருந்தாலும்

தேவையானவற்றை நாமே சேர்க்கலாம்
ஒவ்வொருவருக்கும் அதில் முழு சுதந்திரம் உண்டு

கேட்பதற்கே கொஞ்சம் கூச்சமாகத்தான்
இருக்கின்றன
பரவாயில்லை
கேட்கவா

நீங்கள் தின்று செரிக்கும்
என் இரகசியங்களில்
ருசி
உங்களுக்கு போதுமானதாக இருக்கிறதா?


கவிதைகள் வாசித்த குரல்:
தயாஜி
Listen On Spotify :

 

About the author

தயாஜி

தயாஜி

மலேசியா நாட்டைச் சார்ந்த தயாஜி, முன்னாள் (மலேசிய) அரசாங்க வானொலி அறிவிப்பாளர்.  புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை எனும் இணைய புத்தக அங்காடியை நிறுவி நடத்தி வருகிறார். இதுவரையில் ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ என்ற பத்திகள் தொகுப்பும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல – 101 குறுங்கதைகள்’,'குறுங்கதை எழுதுவது எப்படி ? - 108 குறுங்கதைகள்' தொகுப்பும் ,‘பொம்மி’ கவிதைகள் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ எனும் பதிப்பகத்தையும்  தொடங்கியிருக்கிறார். குறுங்கதை பயிற்றுனராகவும் செயல்படும் இவர், மலேசிய தொலைக்காட்சி வானொலி படைப்புகளுக்கு எழுத்தாளராகவும் இருக்கிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
அகிப்ரியா

அடுத்தவர் இரகசியம் எப்போதும், கேட்பவர்களுக்குக் குறு குறு வென்ற ஒரு கள்ளத்தனத்தை உண்டாகும். எவ்வளவு பெரிய இரகசியமாக இருப்பினும் ஒரு வினாடிக்காவது ஒரு வித மகிழ்ச்சியை விரும்பும் மனம். அது உளவியல். கவிதை அருமை. கவிதையின் கடைசி கேள்வி கவிஞரின் இரகசியத்தின் ருசி போதுமா என்றால் கண்டிப்பாக போதாது 🫣🫣.. இதுவும் உளவியல் தான் 🤔🤔 கவிதையைக் குரல் வடிவில் கேட்பது நன்றாக உள்ளது. நுட்பம் மின் இதழின் முயற்சி பாராட்டதக்கது. வாழ்த்துக்கள் 🥰

You cannot copy content of this Website