பொட்டல் நிலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த நான்
வெகுதூரம் சென்றுவிட்டேன்
மரங்களெல்லாம் வேறு வேறு வகையாகயிருந்தன
ஒன்றுக்கொன்று அவை
நெருக்கமாய் நின்றன நிழலில்
பெரிய மலைச் சிகரங்களையுடைய
பெரிய ஒற்றை நிழலாய்
அவை பூமியின் மீது விழுந்தன
ஒரே நிழல்தான்
சிகரங்களின் மீது ஏறும்
வழியாகவும் விழுந்தது
நிழல்களின் முனைகளில்
கூர்தீட்டிப் போகின்ற
ஒரு திரும்பிவரும் பயணத்திற்குத்
தயாராகிறேன்
ஏற்ற இறக்கங்களுடன்
மரங்களின் நிழல்கள் காட்சியளிக்கின்றன
மரங்களே ஏற்ற இறக்கங்களுடையவைதான்
மரம்விட்டு மரம்தாவும்
ஒன்றாகத்தான்
ஒன்றாகக் கோர்க்கப்பட்ட
நிழல்களின் மீது தாவித் தாவிப்போகிறேன்
அந்தப் பெரிய நிழல்
என் கண்களில் விழாமல்
இருந்திருக்கலாம்
பொட்டல் நிலத்தில் நிழலும் விழாமலிருந்திருக்கலாம்
காற்றுக்கென்ன வேலி என்பதுபோல்தான்
நிழலுக்கும் வேலியில்லை
நிழலென்பது நீரூற்றி அழிக்கமுடியாத கோலம்
நிறங்கள் பூச முடியாத கோலம்
சிகரங்களின் மீது ஏறியிறங்கி
வருமெனக்கு சிகரங்களே வழிவிடுகின்றன
பள்ளங்களே மீண்டும் வழிவிடுகின்றன
அன்புமணிவேல்