-
அம்பா எனும் சிகண்டி
♦ புதிதென முகிழ்க்கும் காதலின்
சுவையென்ன அம்பா.. ?
⇒ வெற்றிலைச் சாற்றில்
பனங்கள் தோய்த்து
அதிமதுரம் தடவிய நாவில்
ஒரு மிடறு கொள்ள
மெல்லென ஊறும் இரசமது.
♦ தீராப் பெருங்காமத்தின்
வாசமென்ன அம்பா.. ?
⇒ கொப்பணிந்த காதுமடலின் பின்புறம்
நேற்றிரவு அவள் சூடியிராத
செங்கமல வாசம்
(அ)
⇒ கட்டுக்கடங்காமல் பாய்ச்சலிடும்
குதிரையின் உடல் மணமும்
உயர் புல்வெளி சிதையும்
பச்சை வாசமும்
கலந்த ஓர் அடர் நெடி
♦ மறுதலிக்கப்பட்ட அன்பின்
ஒலியென்ன அம்பா.. ?
⇒ தேன் நிறை கூட்டின்
வழி மறந்த
மனம்பிறழ் வண்டின்
வலிமிகு ரீங்காரம்
♦ புறக்கணிக்கப்பட்ட நேசத்தின்
வடிவமென்ன அம்பா.. ?
⇒ திருகி எறிந்த
மூன்றாம் முலை
பாதி தேய்ந்த கோளென – வானில்
வலம் வரும் கோலம்.
♦ மனமுடைந்து இறந்த உயிரை
உணர்வதெப்படி அம்பா.. ?
⇒ வெஞ்சினம் தீர்க்கும் நாளெண்ணி
கருவுக்குள் சுழலும் சிசுவின் அசைவை
நிறைசூல் வயிற்றில் தொட்டுப் பார்.
-
கறுக்கும் தேநீர்
சூரியன் ஒரு பெரிய எலுமிச்சையென நீருக்குள் மூழ்குகிறது
அந்தியின் அலைகள் பொன்னிறத்தில் உன்னை கிறங்கடிக்கும்
உலகின் மிகப்பெரிய குவளையில் தளும்புகிறது லெமன் டீ என்கிறாய்
நேரம் செல்ல செல்ல ஆறிக்கொண்டே இருக்கிறது
நீயும் அருந்தாத நானும் பருகாத
கறுத்துக் கொண்டிருக்கும் இவ்வளவு ‘தேநீரை’
எந்த கடலில் போய் கொட்டுவது?
-
என்று..
உன் நிர்வாணம்
உன்னை ஏன்
இவ்வளவு பயமுறுத்துகிறது?
அந்தரங்கமாக குளியலறையில்
மேலெங்கும் நீர் வழிகையில்
குளிரான குற்றவுணர்வின் ஈரத்தில்
உன் கண்ணீரின் வெதுவெதுப்பு கலக்கிறது
அறுவை சிகிச்சை மேசையில் படுத்தபடி
ஆடைகள் அனைத்தையும்
களைந்து விட வேண்டாமென
மீண்டும் மீண்டும் இறைஞ்சுகிறாய்
உன் வஸ்திரங்கள் அனைத்தும்
உன் உடலின் அடர்வாசத்தை
காற்றெங்கும் நிரப்புகின்றன
ஒரு கலவியின் துவக்கத்தில்
உன்னால் கைவிடப்பட முடியாத
உடைகளை வைத்துக் கொண்டு
என்ன செய்வதென்று தடுமாறுகிறாய்
நான் அறிந்து கொள்கிறேன்
உன் உடலை அல்லாது
நீ வேறு எதற்கோ அஞ்சுகிறாய் என்று
வேறு எதையோ மறைக்க விரும்புகிறாய் என்று