-
காதலிகளை டம்ளராக மாற்றிக் குடிப்பவன்
திருவாளர் குடிகாரர்
குடிப்பதில் இருக்கும் அழகியல்
தேர்ந்தெடுக்கும் டம்ளரில் தொடங்குகிறது என்பார்,
தினமும் புதிய வகை டம்ளரைத் தேர்ந்தெடுப்பார்
அதிகமாக நேசிக்கும் விஸ்க்கியை
இளநீரில் ஊற்றிக் குடித்தார்
ஆப்பிளைத் தோண்டி ஊற்றிக் குடித்தார்
காதலியின் வாயில் ஊற்றி ஐஸ் க்யூப்கள் போட்டுக் குடித்தார்.
10 வது ரவுண்டில் அவள் தனியாக ஊற்றி குடிக்காமலே
போதையில் சரிந்தாள்
உறிஞ்சிய சூப்பெலும்பில் ஊற்றிக் குடித்தார்
ஒட்டகத்தின் நுரையீரலில் ஊற்றிக் குடித்தார்
வெட்டப்பட்ட மாட்டுக் கொம்பில் ஊற்றிக் குடித்தார்
அவருடைய அழகிய குதிரையின் காதில் ஊற்றிக் குடித்தார்
தினமும் குடிக்கும் டம்ளர்கள் நம் கற்பனைக்கு எட்டாததாக மாறின
8-வது காதலியை டம்ளராக்கி, விஸ்கியை ஊற்ற
குடிக்கும் முன்னே அவள் அலறியடித்து ஓடினாள்
டம்ளர் தேடலில் சலிக்காமல்
வீட்டின் வெளியில் இருந்த பழைய உரலில் ஊற்றி
உரலைத் தூக்கிக் குடித்தார்
பிறகு
எல்லோரும் அவரைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று
குடிப்பதில் இருக்கும் அழகியல்
குடிக்கத் தேர்ந்தெடுக்கும் டம்ளரில் இருந்து தொடங்குகிறது என்பார்
திருவாளர் குடிகாரர்.
- எருமைக்கண் கடிகாரம்
எங்கள் ஊரில் எருமைகளின் கண்களில் நேரத்தைப் பார்க்கிறார்கள்.
ஒரு நாள்
தரிசுப் பகுதியில் நடந்து சென்ற வெளியூர்ப் பயணி,
தனது கைக்கடிகாரத்தை மறந்துவிட்டதை உணர்ந்து
ஒரு சிறுவனிடம் நேரம் கேட்டார்.
அச்சிறுவன் சிறிது தயங்கினான்; பின்னர்,
“அதனிடம் கேட்கப் போகிறேன்” என்று
தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்
சிறிது நேரத்திற்குப் பின்
குக்கை இல்லாத எருமைக் கன்றை ஓட்டி வந்தான்
அதன் கண்களின் வெள்ளை நிறத்தைக் காட்டி தயக்கமின்றி கூறினான்:
“இன்னும் பன்னிரண்டு மணி ஆகவில்லை பத்து நிமிடம் இருக்கிறது” என்று.
உண்மையாகவே அப்படித்தான் இருந்தது பொழுது.
-
சோப்பு நுரை
பெண்கள் அவர்கள் புரிந்துகொள்ளும் உண்மையான வேலையைச் செய்கிறார்கள் அதனால் உண்ணத் தகுந்த சிறிய அரிசி காளான்கள் போல ஒளிர்கிறார்கள்.
கையசைப்பில் கடலை மறையச் செய்யும் லாவகத்தோடு அவள் துணி துவைக்க ஆரம்பித்தாள். வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு தெளிவற்ற உணர்வுடன் சோப்புத் தூளைக் கரைத்தாள். அது ஒரு புதிய வாசனைதான் ஆனால் உலகுக்குச் சொல்ல வேண்டிய அளவில் இல்லை
குமிழ்கள் எப்படி வெடிக்கின்றன என்பதைப் பாருங்கள் என அவள் கூறினாள்
காது இருந்தவர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை, இவ்வுலகம் ஒளியை விட இருளால்தான் அதிகம் நிரம்புகிறது என அவளுக்குத் தெரியும். தண்ணீரைக் கலக்கியபடி சிரித்தாள் துணிகள் மெதுவாக மூழ்கின, தனது விளையாட்டைத் தொடங்கினாள். சோப்பு குமிழிகளை அள்ளி எடுத்தாள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் சொல்லி ஊதினாள். பறந்து சென்ற குமிழிகள் எதிர் வீட்டுத் தோழியின் மார்புகளின் மீது அமர்ந்தன.
ஊதியவளின் மார்புகளின் மீதும் சில குமிழிகள் அமர்ந்தன. இருவரும் கண்ணாடியில் பார்ப்பதுபோல ஒரே மாதிரி சிரித்தார்கள்.
சிரித்தார்கள்.
சிரித்தார்கள்.
துவைத்தார்கள்.
ஒரு வனாந்திரத்தை உருவாக்கினார்கள்..
கைகளுக்கென்று ஒரு வேலை விரல்களுக்கென்று ஒரு வேலை உதடுகளுக்கென்று ஒரு வேலை. நாக்குகளுக்கென்று ஒரு வேலை. உடலுக்கென்று ஒரு வேலை. மனத்திற்கென்று ஒரு வேலை என செய்தார்கள்
அவர்கள் அணிந்தவை உட்பட
எல்லா
துணிகளும் மகிழ்ச்சியாக உலர்ந்தன
அவர்களின் உடல்கள் மகிழ்ச்சியாக இணைந்தன.