cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

முத்துராசா குமார் கவிதைகள்


  • செவ மடை

நிறை கம்மாவைக் குடித்தபடி

மடையாழ வாயில் சிக்கி இறந்தது சினை எருமை.

கரையுடைக்க நிரம்பும் நீரை சீக்கிரம் அவிழ்த்துவிட

நிலக்கிழார்கள் எனைக் கும்பிட்டார்கள்.

‘எருமைக் குருதி கலக்கவிருக்கும் இந்நீரை

நான் ஒரேமூச்சில் வாரியிறைக்கும் எல்லையளவில்

எஞ்சனங்களுக்கு நிலங்கள் தருவீர்களா?’எனக் கேட்டேன்

தெய்வத்திடம் சொல்லும் தாழ்மையுடன்

சரியென்று ஒப்புக்கொண்டனர்.

அடியில் இடுப்புச் சங்கிலியை ஆட்டுகையில்

என்னை மேலே தூக்குங்களெனச் சொல்லி

சங்கிலி மறுமுனையை

அவர்களிடம் கொடுத்துக் குதித்தேன்.

வான்நோக்கி விறைத்திருக்கும்

நாலு கால்களுக்கு நடுவில்

சினை வயிற்றை வணங்கிவிட்டு

வாயால் எருமையினை அரிந்தேன்.

வாமடைகளை உடைத்து நிலமெங்கும் ஓடியது செந்நீர்

விடாமல் ஆட்டிய சங்கிலியை

கம்மாவுக்குள் போட்டனர்.

அன்றிலிருந்து அவர்களின் மூத்திரச் சுனையில்

ரத்தம் பீய்ச்சியது.

 ‘நீர்ச்சுழி’ கவிதைத் தொகுப்பிலிருந்து

 

••••

  • கழுமரத்தி

ஏழு கழுமரத்துக்கும்

ஏழு ஆண் தலச்சம்பிள்ளைகளைக்

கேட்டுவாங்கித் தின்ற கழுவடியானை

வாரிசிழந்தவள்

தனது தோள்பட்டையிலிருந்து

விரட்டினாள்.

சிசுவுக்கு மாற்றாக

செஞ்சேவல்களை வேண்டிய கழுவடியானுக்கு

வேலமரங்களைக்

கழுமரங்களாக்கி ஊன்றுகிறாள்.

கழுக்கூர்களைக் கண்ணீர் உகுத்துச் செய்கிறார்

இரும்புத்தச்சர்.

பின்னிரவுக் கழுவில் குத்தப்பட்ட சேவல்களின்

பதினான்கு கண்களும்

சூரியனுக்காக

கொண்டைகள் நடுங்க

மயங்காது காத்திருக்கின்றன.

விடியலைப் பார்த்தவுடன்

கழுமரங்கள் அசைய

றெக்கைகளை விரித்தடிக்கின்றன.

கூவக் கூவ

சந்தனங்குங்குமம் மணக்கும்

கழுமடியைக் கட்டிப்பிடித்து அழுகிறாள்.

தூக்கணாங்குருவிகளின்

கைவிடப்பட்ட நார்க்கூடுகளால்

பனிக்கழுமரத்தை எரிக்கிறாள்.

வேப்பங்கனியின்

இனிப்புச்சதையை அப்பி

வெயில் கழுமரத்தை

குளிர்விக்கிறாள்.

 ‘கழுமரம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து
Listen On Spotify :

குறிப்பு :
  இக்கவிதைகள்  47-ஆவது புத்தகக் காட்சியை முன்னிட்டு ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற ”நவீனக் கவிதைகள் வாசிப்புக் கூடுகை” நிகழ்வில் வாசிக்கப்பட்டவையாகும்.  நுட்பம் – கவிதை இணைய இதழுக்காக எழுத்து மற்றும் ஒலிவடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Courtesy :
கவிதைகள் ஒலி மூலம் : Shruti TV 

About the author

முத்துராசா குமார்

முத்துராசா குமார்

கவிஞர், எழுத்தாளர். இவரின் பிடிமண், நீர்ச்சுழி எனும் கவிதைத் தொகுப்புகள், ஈத்து எனும் சிறுகதைத் தொகுப்பு ஆகிய நூல்களை சால்ட் & தன்னறம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website