நம் பிரிவின் நூறாவது நாள் இன்று
நூறின் கனிந்த இரு சுழிகளிலும்
நான் உன் நினைவை முட்டி முட்டி மாந்துகிறேன்
அனைத்தையும் எரித்து குளிர்காய்ந்து கொண்டிருக்கிறேன்
உன் இன்றைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்
வாக்கியத்தின் இருபுறமும் இரு தீத்துளிகள் நடனனிக்கின்றன
அனலில் மூச்சு முட்டுகிறது
தொடுதிரை திருவிழாவே
உன் இன்மையும் கூட திசுக்களில் போதையூட்டுகிறது
எப்போதோ புணர்ந்தடைந்த விந்தை
ஏதோ ஒரு கடற் பருவத்தில் கருவென மலர்த்தும் ஆமைகளைப் போல
நான் உன் மீதான காதலை அகாலத்தில் சுமக்கிறேன்
என் சூலகத்தில்
என் செல்ல காவடியே
நாம் வாழ்ந்த மெய் நிகர் அகத்தை
இன்று திறந்து பார்த்தேன்
அந்தந்த நேரத்து மிகு உணர்ச்சிச் சொற்கள்
அதீத நம்பிக்கையில் அனுப்பப்பட்ட உரைபடங்கள், காணொளிகள்
உணர்ச்சிரசம் சொட்டச் சொட்ட அரிந்து எடுக்கப்பட்ட தலைகளாக எண்ணற்ற எமோஜிகள்
அனைத்தின்மீதும் அபத்தத்தின் தூசி
ஆராய்ச்சி தோல்வியுற்ற பரிசோதனை கூடமாய் கிடக்கிறது
நம் காதலின் டிஜிட்டல்கொடி
அதன் மூலையில் குந்தி இருக்கும் பிசாசு
நான் உனக்கு அனுப்பிய முதல் பாடலை
முனகிக்கொண்டு இருக்கிறது
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது
என் ஞான துந்தினியே
இந்நூற்றாண்டின் பெருங் காமத்துயரி நான்
ராக் காலத்து துரிஞ்சில் கள்ளிப் பூவில் தேன் எடுக்கிறது
என் மதுவுக்குள் நடு விரல் நுழைத்து போதை ஏற்றவோ நீ இல்லை.
ஒரு பொசசிவ்வான ஆண் பூச்சியின் ரீங்காரம்
எவ்வளவு மென்மை எனினும் சகிக்க இயலாது என்றாய்
சரி தான்
ரவுடித்தனமான மொழியில் கவிதைகளை எழுதி உன்னைக் கடப்பேன் என்றேன்
இந்நூறுநாட்களில் மீள்தல் என்கிற சொல்லை ஒரு வழியாக ஒரு நாள் உன்னால் முழுமையாக உணர்ந்து விட்டேன்.
இன்னும் எத்தனை சொற்களை இப்படி உணர வேண்டுமோ
அதற்கிடையில் உன் எடை அளவுக்கு பழங்களும், இறைச்சியும் தின்னும்படியாக விட்டது
வாழ்வென்பது பதிலீடுகள் ஆன புனைவின்றி வேற என்ன?
இந்த பிரிவு கை வீசி கை வீசி நடந்து போகிற ஓர் எரியும் உடல்
அல்லது
சூரியகாந்தி பூ நினைவில் ஒரு காட்சி பிழை
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்
நீ என் முதுகில் அறைந்த மருதாணி கையின் சிவப்பு
என்றும் அழியாத நம் காமத்திற்கு நீ இட்ட கைச்சாத்து
பிரிவு பிரிவு தான் தூரம் தூரம் தான்
ஆனாலும்
காலம் என்னில் பிணைத்த நீங்கா நிகளம் நீ
உயிரியலின் கவித்துவமான அந்த மர்ம மலரை
இனி யார் நுகர்ந்தாலும் அதில் கமலும் நம் விரக வியர்வை வாசனை
இனி வரும் பிரிவின் எல்லா நூறு நூறு நாட்களிலும் மீள மீள ஒரே கனவைக் காண்பேன்
புவியெல்லாம் என் காமத்தின் புற்கள்
நீ அதைக் கண்ணீரோடு மேய்கிறாய் நவ்வி..!