-
திரும்பிச் செல்லும் படகு
டிசம்பர் மதியத்தின் குளிர்மேகம்
ஒளியை அளாவி நீந்தியபடி மிதந்து நகர்கிறது.
உயர் அடுக்கு கட்டிடத்தின் கட்டுமான பணியில் இருக்கிறான் தொழிலாளி.
அவன் தலைக்குமேல் வான்குடை வீரனைப்போல
திடுமென வந்து நிற்கிறது சூரியன்
எந்த நொடியிலும் கீழே குதித்துவிடுவேன்
என்றொரு பாவனை அதன் ஜொலிப்பில்.
கண்விலகாது பார்க்கிறான்.
கடலாழத்தில் மூழ்கிகொண்டிருப்பவனை
அழைத்துச் செல்ல வரும் சிறு படகனெ
வாழ்வு கையசைக்கிறது.
எல்லாப் பணிகளையும் நிறுத்திவிட்டு
ரயிலேறிவிடலாம் எனத் தோன்றுகிறது அவனுக்கு
அப்போது ஆரஞ்சொளியின் தீர்க்கத்தில் ஒரு புள்ளிக் கருமை
அவன் நெஞ்சாழத்தை தொடுகிறது.
ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
எதிர்காலமற்ற நிலப்பரப்பில்
எரியும் சூரியனைப் பார்த்துக்கொண்டிருக்கும்
தன் தாயைப்பற்றி நினைக்கிறான்
அவள் மகிழ்வோடு ரொட்டி சுடுவதைப்பற்றி.
மகள்கள் பள்ளியிலிருந்து திரும்பும் அந்த மாலையின் அழகைப்பற்றி.
அவர்களின் வாழ்வுக்காகவேணும் அவன் பணிசெய்தாக வேண்டும்
அழைப்பதற்காக விரிந்த கைகளைத் தாழ்த்தி
மீனாக மாறி நீந்த விழைகிறான்.
-
கப்பக்கிழங்குகளுக்கு நன்றி
எலும்பு மஜ்ஜை உறையும் குளிர்நாளொன்றில்
அப்பா மறுபிறவிவெடுத்தார்.
அவரது இடது தோள்பட்டையை உரசிச் சென்ற துப்பாக்கிக் குண்டு
சகா ஒருவரின் நெஞ்சைத் துளைத்தது
புற்றுநோய் சிகிச்சைகாக மருத்துவமனை படுக்கையில் கிடந்தபோது
மரணம்வரை அதை புலம்பினார் அப்பா.
ஒரு படி அரிசிக்காக அவர்கள் புரட்சி செய்தார்கள்
அதற்காக பலநூறு லத்தி அடிகளை
பரிசாகப் பெற்றார்கள்
ஒரு நாளுக்கு இரண்டு ரூபாய் கூலி
அதில் ஐந்து பிள்ளைகளின் பசியைப் போக்குவது எப்படி?
பிள்ளைகளின் அரை வயிற்றை நிரப்பவும்
தலைச்சுமையுடன் மலை ஏறவும்
அப்போது அப்பாவிடம் இரண்டு பாடல்கள் இருந்தன
அவர் அதை இப்போது முழுவதுமாக மறந்துவிட்டதும் நன்மைக்கே
இல்லையென்றால்
பாடும்போது காய்த்துப்போன அவர் உள்ளங்கைகளைத் தடவி
ஆறுதலூட்டுவது வெகு சிரமம்.
அலையலையாய் வெள்ளி மேகங்கள் தவழும்
மலையுச்சியை நினைவு கூர்ந்தபடி அவர் மரணிக்க வேண்டுமென
நான் பிரார்த்தனை செய்தேன்
ஆனால் அவரோ பலநாள் மழை இரவுகளில்
பசியாற்றிய கப்பக்கிழங்குகளைப் பிரார்த்தித்தபடியே
இறந்துபோனார்.
-
தாழ்நில சங்கீதம்
புயல் மழை அடிக்கிறது
கொஞ்சமும் அமைதியின்றி மரங்கள் அசைகின்றன.
மழை ஓசையினூடே சன்னமாகக் கேட்கிறது ஒரு பாடல்
அதன் பின்னே வருகிறது கமகமவென உணவின் வாசம்
வடமாநில கட்டிடத் தொழிலாளி சமைத்தபடி பாடுகிறார்
நாள் அறியா மொழியில் இழைந்தோடும் அவ்வினிய சங்கீதம்
எனை அழைத்துச் செல்கிறது ஒரு பொள்ளான வயல்வெளிக்கு
அங்கே காண்கிறேன்
அசைந்தாடும் சூரியனின் பலவண்ணத்திட்டுகளை
அதில் மறைகின்றன இப்பூமியின் அகர துக்கங்கள்
கொக்குகளும் நாரைகளும் அச்சமின்றி உலாவி
பொன்னிறத்தானியங்களை கொத்தி தின்கின்றன.
அத்தாழ்நிலத்தின் மறுபுறம் இறங்கும் சூரிய நிழல்களில்
இளைப்பாறி அமர்ந்திருக்கிறான் அம்மா.
பறவைகளை விரட்டும் கவணோடு
அச்சமவெளியையே கண்காணிப்பவர்போல
வயல்வரப்பில் வேகு வேகுவென்று நடந்து வருகிறார் அப்பா
அவரின் உற்சாகத் தாவலில் குரலெடுத்துப் பாடுகின்றன
தவளைகள்.