-
இந்த நிமிடம் சீக்கிரமே முடிந்து போய்விட வேண்டும்..
எவ்வப்போதுக்குமான
மௌனத்தை அறிந்துகொள்ள பழக்கப்படுத்தியிருக்கிறாய்
அதனை சுலபமாகக் கடந்துவிட முடிந்ததில்லை
இதை நீ ஒப்புக்கொள்ள மாட்டாய்
முடியாதது
என்றொன்றில்லை என்பாய்
ஆனால் இருக்கிறது
நானுனக்கு அனுப்பி வைக்க சில ரத்தத் துளிகள் உண்டு
அதன் யுக வாடை நீ அறிந்திடாதது
எனது
அகாலம் என் மீது எழுதிச் செல்லும் துர்க்கனவின்
பசலை மொழி
இதுவரை உனக்கு அறிமுகமற்ற லிபியில் எழுதப்பட்டவை
அதனை மொழிபெயர்க்க உனக்கு
இன்னொரு காதல் வேண்டும்
இன்னொரு காமம் வேண்டும்
இன்னொரு தனிமை வேண்டும்
அழைக்க அழைக்க எடுக்கப்படாத
இன்னொரு தொலைபேசி எண் வேண்டும்
விடிந்த பிறகும் அகல மறுக்கும் இருளைக் கொண்டிருக்கிற
இந்த அறை
உன் வாசனையால் நிரம்பி வழிவதை வெறுக்கிறேன்
உடலெல்லாம் முளைக்கும் முள்ளின் முனை
ஊர்ந்து கடந்த முத்தத்தின் ஊடுருவல்
இதயம் வரை புகுந்துவிட்ட வேராகி சுண்டுகிறது
பாய்ந்தோடும் ரத்த நாளங்களை
வெவ்வேறு பாதைகள் குறித்த கனவின் வாசல்
திறக்கும் பாவனையிழந்து
மறந்து போன நடிப்பின் பிழையோடு
செய்ய ஏதுமற்ற யோசனையில் நெடுநேரமாய் நிற்கிறது
மௌனம் எழுதிய அபத்த நாடகத்தின் கால்களாக
இந்த நிமிடம் சீக்கிரமே முடிந்து போய்விட வேண்டும்
உடல் மெலிந்த நொடி முள்ளின் வீரியம்
நஞ்சூட்டுகிறது சொல்லை
தலைக்குள் பறக்கும் கேவல்களின் ஒலி
வசன உச்சரிப்பின் சவாலை எண்ணி
கேலி செய்கிறது
நகர மறுக்கும் பாதங்கள் புராதான சாலையொன்றின்
உலர் மணல் துகளென உறுத்துகிறது
இருப்பின் குளிரை
இந்த மந்தகாசம்
நேற்றைய இரவைத் துணைக்கழைக்கிறது
இருளின் மீந்த சரிவில் உருள்கிறேன்
மெல்ல மெல்ல
மிதக்கும் தரைக்குள் புதைகிறேன்
கொஞ்சங்கொஞ்சமாய்
மௌனத்தின் அடர்த்தி உள்ளிழுக்கிறது
என்னைத் தேடி வந்துவிடாதே
நீ
எங்கிருக்கிறாய்
******
-
உனக்கது புரிகிறதா..
காரணங்கள் நீடிக்கவில்லை
சில சொற்களே அவை
பாசாங்கு செய்வாய் தெரியும்
ஆனால்
பார்வையின் ஆழத்தால் கனம் தாளாமல்
உயிர் திரண்டு வழிந்த இதயத்தின் துளி
உதட்டோரம் ஒதுங்கியபோது
நீயேன் முத்தமிட்டு
அதனை ஒற்றி எடுக்கவில்லை
பெருவிரல்களின் முனை அழுந்த உடல் எக்கி
அண்ணாந்த முகத் தவிப்பில்
படர்ந்த ஏக்கத்தை
எப்படி எழுதித் தீர்ப்பாய்
முன்பு
இடை வளைத்து இறுகிய பிடியின் நினைவில்
பம்பரமாய் சுழல்கிறது
என் மௌனம்
தாங்கொண்ணா அப்புன்னகை இழையும்
தனிமையின் நறுவிசில்
செத்துவிட அழைக்கிறாய்
ரகசிய பள்ளத்தாக்கில் மொக்குடைந்து கமழும்
வண்ணப் பரிதவிப்பாய்
படுக்கை முழுவதும் பரவுகிறேன்
ஓசையின்றி நுழையும் மென்காற்றாய்
என்னை ஊடுருவும் மோகத் தீயில்
நீ
நீ மட்டுமே
கொழுந்துவிட்டு எரிகிறாய்
சொல்
காதுமடல் சிலிர்க்கச் சிலிர்க்க தோள்மேட்டில்
மயிர்க்கால் பற்றி விட்டுவிட மறந்த
ஈரத்தை
எங்கே பத்திரப்படுத்த
தளும்பும் இத்தனிமை இரவில்
எப்போதும் நீ பருகும் கோப்பைக்குள்
இப்போதும் ஊற்றி வைத்திருக்கிறேன்
என்னை மட்டுமே
விட்டு நீங்குதல் குறித்து கவிதைப் பாடிக்கொண்டிருந்த
அற்றைப் பொழுதின் ஜூவாலையை
மெழுகின் தலையில் சுடராட பணித்திருக்கிறேன்
உருகும் இவ்வேட்கை
விரல் கோத்து இடையறாமல்
சுவரில் நடனமாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது
நோகச் செய்யும் இசையின் மென்மையில்
இறைஞ்சிக்கொண்டிருக்கிறேன்
உனது வருகையை
புரிகிறதா உனக்கு
அதன் பின்னும்
குளிர் முகிழா பசலைத் தீவில்
மோனித்திருக்கும்படியே சபித்திருக்கிறாய்
வெந்துகொண்டிருக்கிறேன்
உஷ்ண மூச்சு உரசும் பிடரியின் ஞாபகத்தில்
கத்தியொன்றைச் செருகுகிறது
அலைபேசியில் கசியும் உனது உன்மத்த குரல்
மனம் மேவும் காமத்தின் நீர்மட்டம்
கட்டிலின் இடுப்பைத் தொட்டுத் துடிக்கிறது
பார்
பார்
இன்னும் இன்னும் என்று கூவுகிற தாபக் குயிலின் வாதை
ஜன்னல் தாண்டி என்னைத் தாண்டி
நீ தட்டக் காத்திருக்கும் கதவில்
மோதுகிறது பார்
வருவாயா
கீழுதட்டின் திரட்சியை விரல் நுனிகளால் அலுங்கப் பிதுக்கி
தீண்டிச் சுவைக்க நீளவிருக்கும் உன் நாவின் எச்சிலில்
எனது தனிமையின் சுடரை ஏற்றி வைப்பேன்
வருவாயா
ஜ்வலிக்கும்
இக்கண்களில் ததும்பி அசையப் போகிற
உன் உருவ நீட்சியில்
எதையெல்லாம் வாசிப்பாய்
எனதன்பே
நகர மறுக்கும் நிமிடங்கள் முழுவதும்
சாரலில் நனைந்திருக்கிறது
துளித் துளியாகத் திரண்டுகொண்டிருக்கும்
இந்த அகாலம் நிறமற்றது
என்னைத் திறந்து பார்க்கும் தருணத்துக்கானது
மயங்கிச் சொக்கும் எனது இமை மேட்டில்
எனக்கெனத்
துள்ளத் துடிக்க வந்திறங்கும்
அந்த முத்தச் சிறகு
ஆதி வனத்திலிருந்து நீ உரித்துக் கொணரும்
உன் மௌனத்தின் வரம்
அறிவேன்
இதோ
தலையசைந்து மருகும் மர இலைகளினூடே
ஒளிர்கிறது மஞ்சள் விளக்கு
இளந்தளிர் நிழல் வழியே கசிந்து புலரும்
மிச்சத் தெருவில்
எப்போது நுழையும் உன் கோட்டுருவம்
மழைத் தீண்டும் நட்சத்திரங்கள் நம்மை நோக்கி
மிதந்தபடி காத்திருக்கின்றன
அவை
படுக்கை விரிப்பின் நூல் பிசிரில்
சிக்கிக்கொண்டு தலையணையில் இடம்பிடிக்க
அடம்பிடிக்கின்றன
வா
வந்ததும்
வலு கூட்டி முயங்கும் கணத்தில்
எடையிழந்து தத்தும் காற்றில்
எனைத் தூக்கிப்
பற
பறப்பாய் தானே
******
-
அனைத்தின் மிச்சத்திலும்..
திகட்ட மறுத்த இரவின் வாயில் நுரைக்கிறாய்
துளி மதுவென
உழலும் கனவின் குமிழைத் தீண்ட நீள்கிற விரல் தகிப்பில்
தொங்குகிறது குளிர் முத்தம்
எப்போது இட்டாய்
காற்றுப் புகுந்து வெளியேறும் உடையின் மென்மையில்
வானத்தின் ஈரம் வாய்த்துவிடுகிறது
உனக்கு மட்டும்
பிடரிக் குழியில் உருளும் வியர்வை
நறுமணம்
அறிவாயா அது உருவாக்கும்
உன்மத்தம்
தழல் திரியும் ஜ்வாலை நலுங்க
எரிகிறேன் மோகத் தீயில்
கருநீலம் சுழன்று இறங்கும் வெளியின் ஈர்ப்பில்
யாமம் எண்ணி
தூக்கத்தில் சிரிக்கிறாய்
இரக்கமேயில்லாமல்
புரண்டு படுக்கும் உடலின் இடப்பெயர்வில்
எந்தக் காட்சி துடிக்கிறது
ஆழத்தில்
இழுத்து நெஞ்சழுத்திக்கொண்ட
என் பொழுதின் வண்ணம்
மெல்ல
மெல்ல
இணங்குகிறதா உன்னோடு
நாடித் தாங்கி யோசிக்கும் வேளையில்
நகர்ந்துகொண்டே இருக்கிறது
என் ஜன்னல் தாண்டி
இந்நகரம்
காரணங்கள் இருப்பதில்லை உன்
இருப்புக்கும் இன்மைக்கும்
விட்டுச் செல்லத் தெரிந்திருக்கிற
அனைத்தின் மிச்சத்திலும்
ஓர் இரவின் வாசம்
பசலைக் கிளையில் அசையும் இலைகளின் நிறத்தை
கருநிழலென மொழிபெயர்க்க ப்ரியப்படுகிறது
ஜன்னல் சட்டகத்தை
ஆக்கிரமித்திருக்கும் வலைச் சதுரம்
விலா அணைய நெருக்கும்
கரங்களின் வலுவைப் பாட முயல்கின்றன
அந்நிறங்களின் மீச்சிறு வடிவங்கள்
கால் மடக்கி சாலையைப் பார்த்தபடி
உன் வரவுக்காகக் காத்திருக்கும் என் இருப்பிடத்தின்
ரகசியம் அறிந்துகொண்டு
ஒரு பட்டாம்பூச்சி துணைக்கு வந்துவிடுகிறது
நேரம் தவறாமல்
உனது கள்ளத்தனங்களின் பொய்வேலிகளைக் கடந்து
மகரந்தம் தூவ முனைவதில்லை என் ஏக்கம்
மீளப் புலரும்
வனத்தின் வேர் பச்சை நுகர விழைகிறேன்
மோகத் தனிமையில்
தின்னத் தந்த மௌனம் மட்டுமே
எப்படி பசியாற்றும்
வந்தென்னை மீண்டும்
புசி
******
-
வேறொன்றுமில்லை..
இமைகள் புடைக்க ஏங்கிச் சிலிர்த்து
ஒற்றைக்குரல் கூட எழ வழியற்ற குரல்வளையில்
சாம்பல் படரும் பசலையின்
ஈரப்பதத்தோடு
உனது உள்ளங்கையில் புதைய
காத்திருக்கிறது
காமம் திளைத்து அழுது வீங்கிய
இம்முகம்