cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 29 கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

Voice : Anbumanivel

  • நிலைக்குத்தும் மௌனத்தோடு..

புழுங்கும் அறைக்குள் என்னை விழுங்கும்
சொல்லைத் தந்து செல்கிறாய்
கொஞ்சங்கொஞ்சமாய் நீலம் பாரிக்கிறது
அதன் உடல்

சென்ற கோடையில்
பூங்காவில் நாம் வரைந்த ஓவிய மரம்
இன்றும் இலைகளை உதிர்க்காமல் பத்திரமாய் இருக்கிறது

இந்த மேஜையில்
முரடாய் அடங்கி வளர்ந்திருக்கும் போன்சாய் மரத்தில்
உன் பெயரைச் செதுக்க கூர்மையான ஆயுதம் ஒன்றைத் தேடித் தேடி
இழுவரையில் கண்டெடுத்தேன்
இன்னும் நீ பயன்படுத்தாத ஒரு விரகச் சொல்லை

உன் பிடிக்குள் சிக்கிச் செத்துவிடத் தவிக்கும்
இந்தக் காமம்
விடுகின்ற உன்மத்தப் பெருமூச்சை
கண்ணாடியில் ஆவியாக்கி ஊதுகிறேன்
இதயம் வீங்கத் தொடங்குகிறது
மெல்ல

யாமத்தில்
கூந்தலுக்குள் உன் விரல் கோதல் உணர்ந்து
திடுக்கிட்டு விழிக்கிறேன்

அகன்ற ஜன்னலோரம் ஒதுங்கித் தொங்கும்
திரைச்சீலையின் முனை அசைந்துகொண்டிருக்கிறது

அதை
உன் மௌனத்தின் புன்னகை என்று சொன்னால்
நம்புவாயா

ஒருக்களித்துக் கிடக்கும் படுக்கையிலிருந்து
நிலைக்குத்தும் பார்வையில்

நகரும் எறும்பொன்றின் கால்கள்

எனது தாபத்தின் மீது ஓசையேயில்லாமல்
அச்சொட்டாக
பின்னங்கழுத்தில் தொடங்கி கீழ் முதுகுவரை
இரைத் தேடும்
உன் மீசையை வரைகிறது

நீ
கொல்கிறாய்
கொல்கிறாய் யமனே

பார்

இறக்கும் வழியற்று
விரகத்தின் நெடுங்காட்டில்
மீண்டும் மீண்டும் முகிழ்கிறேன்

உன் நறுமணம் கசியக் கசிய ரத்தம் சொட்டுகிறது
மென் இதழ்களில்

உடலோடு நெகிழ நழுவும் நினைவின் உடை
ரகசியமாய் காது மடலில் சில்லிடும் பெயரின் வெப்பம்
புனையப் புனைய பெருகும் உருவகமாகி
நிரடும் அம்மந்திர விரல்கள்

யாவும்
கொலைக்கருவிகள்

அவற்றைப் பிரயோகிக்கும் நின் கணக்குகள்
என் இரவை நோக்கி
ஆதி மிருகங்களையும் சேர்த்தே ஏவுகின்றன

இருந்தாலும்

நீயென் தேவதை
காமத்தையே சாபமென தரத் தெரிந்தவன்
காதல் கண்ணாமூச்சிகளை
அதன் சூத்திரங்களை
அக்னி சுத்தி செய்பவன்

கூடும்போது
பெயரற்று உயரும் உன்மத்தத்தை
மந்திரம் போல் உச்சரிக்கத் தெரிந்த உன் நயத்தில்
கோடி மலர்களென பூத்து உடையக் காத்திருக்கிறேன்
புரியவில்லையா

நீ
தந்துச் சென்ற சொல்லின் வளைவில்
மகரந்தம் வைத்துச் செல்கிறது
சிறகில் வண்ணம் இல்லாத பட்டாம்பூச்சியொன்று

நிறங்கள் கசியும் இவ்வறை
கருப்பு வெள்ளையில் மிதக்கிறது

அனுப்பி வைக்கவா

கனவு தீப்பிடித்து எரியும் வாசனையில்
உன் சொல்
நீல நிறத்தில் கருகுகிறது
என்ன செய்யப் போகிறாய்

அடைந்து கிடக்கும் கதவின் மீது
வெளிச்சம் பாவவில்லை

இருளைப் பருகும் சாவித்துளையின் வழியே
புலப்படும் அசைவுகள்
துடிக்கச் செய்கின்றன நாளங்களின் முடிச்சுகளை

கொதிகலனாகும் சுரப்பிகள் தோறும்
இரக்கமேயில்லாமல் முளைக்கிறாய்
நீ

குளம்புகள் அதிர விரையும் உயிர்ப்பில்
துடித்திட
என்னிலிருந்து வெளியேறி
என் மீதே பரவு

மறுக்காதே

உன் நிலம்
நான்

*******

  • அலையலையென சுழித்து..

கழுத்து அடைப்பட்ட கார்க்
மது ஊறி
காத்திருக்கிறது என்னைப் போலவே உன் வரவுக்காக

பருகப் பருக பித்தேறும் போதையைக் காட்டிலும்
சிறுகச் சிறுக நீ உச்சரிக்கும் வார்த்தைகளை
கவிதைகளாக மொழிபெயர்க்க
அபகரித்து வைத்திருக்கிறேன்

பீத்தோவனிடமிருந்து கொஞ்சம்
மொஸார்ட்டிடமிருந்து கொஞ்சம் என
கொஞ்சத்தை
கொஞ்ச

எனை நீ மீட்ட வேண்டும்
இடை ஏந்தி
நரம்பதிர

மயக்கும் சூழல் என்றேது தனியே
நானல்லவா இணுக்கு இணுக்காக வரைந்துகொண்டிருக்கிறேன்
இந்தப் பொழுதை

முத்தப் படகு மிதக்கப் போகும் இந்த உடல் நதியின்
கரையெங்கும் அகாலத்தில் பூத்திருக்கிறது
உனது புன்னகை

மீட்சி ஏது

விரல்களுக்கு நடுவே எப்போதும் எரியும் சிகரெட்
புகை நூலெழுப்பி சுழலும் கிறக்கத்தில்
என்னைக் கிடத்தி
நான் ஏங்கிச் சாகும் படுக்கைக் கோணத்தில்
எப்போதும் சிக்கும் உன் உருவம்
ஒரு கோட்டோவியம்

அதன் மந்தகாசம் என்றால் என்னவென்று
அறிவாயா நீ

நிக்கோடின் கலந்த உதடு ரேகையின் பிசுப்பிசுப்பை
பிடரிக் கழுத்தில் சுரக்கும் வியர்வையோடு
நுகர விழையும்
இதயத் துடிப்பை என்ன செய்வேன்

இந்த அறை
நிறமற்ற நிறத்தில் என்னை
வாட்டர் கலராக்குகிறது

என்னைத் தொட்டுத் தொட்டு அலை அலையென
சுழித்து இழு
இது உன் கேன்வாஸ்

மழைச்சாரல் பட்டுத் தெறிக்கும் இந்த ஜன்னல் சட்டகம்
மெதுமெதுவாக நா வறண்டு
என்னைக் குடித்துக் கொண்டிருக்கிறது

சாம்பல் நிற காட்டன் வட்டங்கள் பின்னிய திரைச்சீலையோடு
அசையும் தென்றலை மோகிக்கிறேன்
மேலும் கீழுமாய் தவிக்கிறேன்

கள்ளூறும்
கனவொன்று நுரைத்த அந்தியின் இறுதி மஞ்சளோடு
தொண்டைக்குழிக்குள் அடைக்கும் வார்த்தைகள்
மதுப் புட்டியின் கார்க்காக
மீண்டும் மீண்டும்
உருமாறிக்கொன்டிருக்கிறது

என் பசலை நெடி நுகர
சீக்கிரம் வந்து சேர்
கள்வனே

*******

  • முத்தத்தின் நிழல் கோடென..

நீர்க் கம்பிகள் துளைக்கின்றன
கரைந்து ஓடும் உன் வாசத்தின் நிறத்தை வெறிக்கிறேன்
எழும்பி அடங்கும் குமிழ்கள் தூண்டுகின்றன
ஒவ்வொரு தொடுகையையும்

கனவென உடைந்துச் சிதறும் துளிகள்
குளிர் இரவை மீட்டு
நினைவை மயக்கங்கொள்ளச் செய்யும் வித்தை அறிந்தவை

உன்னைப் போலவே

மழை வேண்டுகிற கண்களுக்கு
அபயம் விடுக்கிறது கடந்து செல்லும் சாம்பல் மேகம்

புங்கை மரத்தின் உச்சந் தளிர் இலைகளைக் கொத்தி எம்பும்
பறவைகளின் சிறகடிப்பில் ஹிருதயம் திணறுகிறது
உன் முத்தத்தை நினைத்து

நீ
இக்கணம் இங்கல்லவா இருக்க வேண்டும்

பின்புறமிருந்து என்னை அணைத்துக்கொண்டு
இந்த ஜன்னல் திட்டோடு சேர்த்து அழுத்தி
என் தோள் சரிவின் மீது நாடி பதித்து எட்டி
கீழே தெருவைப் பார்த்து

ஈரமா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்ல
என்ற சாக்குச் சொல்லி

இங்கல்லவா இருக்க வேண்டும்

சுவரில் கட்டை விரல் ரேகைப் பதிந்து போயிருக்கிறாய்
அது ஒரு ஸ்மைலி போல
இரவு நெடுக என்னைப் பரிகசிக்கிறது

இம்சிக்கும் அத்தனை தந்திரமும் அறிந்த இந்தக் காதலை
எங்கு பெற்றாய் வரமாய்
ஏங்கிச் சாகும் சாபத்தை ஏன் நீ இன்னும் அறிந்திருக்கவில்லை

என் பசலை இரக்கமற்றது
குளிர் காலத்தை எனக்குப் பரிசளிக்கத் தெரிந்த உனக்கு
கோடை காலத்தை என்ன செய்வது என்று சொல்லித்தருகிறேன்

வெப்ப மூச்சு மோதும் தயவில்
தோள்மேட்டில் நசுங்கும் முத்தத்தின் நிழல் கோட்டினை
சுருட்டியெடுத்து விரல்நுனியில் சுற்றிக்கொள்
அதை ஞாபக முடிச்சிட்டு அதன் பட்டாம்பூச்சி முனைகளை
பற்களால் துண்டித்து தருகிறேன்

பிறகு
என்னை இழு
என்னோடு என் இரவின் மீது பற

மென்மையாக
மிக
மென்மையாக

*******

  • தோதில்லாத வார்த்தையில்..

ஏதோ ஒன்று நிகழ வேண்டும்
ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும்
ஏதோ ஒன்று நிகழாமல் விடுபட்டிருக்க வேண்டும்

எல்லாமே ஒற்றை நினைவைக் கொண்டிருக்கவில்லை
ஒவ்வொன்றுமே வெவ்வேறானவற்றையே தூண்ட விழைகின்றன
ஏதொன்றிலும் ஏதொன்றும் இணக்கமாயிருக்கப் போவதில்லை

ஆனாலும்
ஒன்று

ஏதோவொன்று

பெயர் குறிப்பிடமுடியாத தவிப்பாக
மனம் முகிழ்ந்திட வழியற்ற பாதையாக
இசை போலல்லாமல் வெறும் முனகலென

எதுவோ
ஒன்று


Art Courtesy : energyclaire.com

கவிதைகள் வாசித்த குரல்:
அன்புமணிவேல்
Listen On Spotify :

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website