cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 29 கவிதைகள்

கார்த்திக் பிரகாசம் கவிதைகள்

Voice : Bhavya Raghavi

  • ஓர் ‘நான்’

பழகிப் போன இலக்கை
தனியாகப் பயணிக்கும் தருணங்களில்
மிக நீண்ட தூரம் எடுத்துக் கொள்ளும்
பாதையைத் தேர்ந்தெடுப்பேன்

இலக்கை
சிறிது நேரம்
தள்ளிப் போட்டு
கலைந்து போனதை கவனத்திற்குட்படுத்தாமல்
சீராய் அடுக்கி இருக்கும் அலமாரியை
தேடித் போய்
கலைத்துப் போடும்
மழலையின் மனபிரதியாய்

பிரிவின் துயரம் ~ இழப்பின் வலி ~ அவமானத்தின் வடு
அன்பின் ஏமாற்றம் ~ காதலின் சுடர் ~ அவநம்பிக்கையின் கூர்

வெறுத்துவிடும் பயத்தை மழுங்கடிக்க
மிகையாய் நேசம்
இயலாமையின் முனை மழுக்க
கொஞ்சம் கூடுதல் அக்கறை

அவிழ்த்து உதறி
இறுகப்பற்றி
இலக்கை அடைவேன்

கடக்கவியலாமல்
முகமிழந்த
சுயத்தின் தொகுப்பிலிருந்து
ஓர் ‘நான்’
காகித மலர்க்கொத்துடன்
காத்து நிற்கும்

******

  • நிஜமாத்தான் சொல்றியா

மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
ஆனந்தனுக்கு ஆறுதல் சொன்னான்
புத்தன்

நானும் ஆனந்தியிடம் சொன்னேன்

‘இல்லாமல் போவதற்காக
வருத்தம் கொள்ளாதே.
உயிரோடு இல்லாவிட்டாலும்
நான் உன்னுடனே இருப்பேன்’

ஆனந்தி திருப்பிக் கேட்டாள்
‘நிஜமாத்தான் சொல்றியா’

******

  • காலாதீத மரணம்

வரையறுக்கப்பட்ட
அதிகபட்சம் எப்போதோ கடந்தாகியது
இன்றைய நாளுக்கான
திட்டமிடல்களைத் தள்ளிப்
போட்டுவிட்டேன்
செய்தி வந்ததும் சீக்கிரம்
தலைகாட்டி வந்து
இன்றைய நாளை
தொலைத்துக் கட்ட வேண்டும்
பலமுறை எதிர்பார்த்து
மதிப்பிழந்து போன
காலாதீத மரணத்திற்காக
விடிந்ததிலிருந்து
காத்திருப்பது
வெட்கமாக இருக்கிறது


கவிதைகள் வாசித்த குரல்:
பவ்ய ராகவி
Listen On Spotify :

About the author

கார்த்திக் பிரகாசம்

கார்த்திக் பிரகாசம்

சேலத்தை பிறப்பிடமாக கொண்ட கார்த்திக் பிரகாசம்; தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website