1
அதிர்ந்து ஓடும் லாரிகளின் நகரம்
மதுவிடுதியின் பிரம்மாண்டத்தைப் பேசியபடி வந்தான் நண்பன்
கண்களில் மஞ்சள் விளக்குகள் நடனமாடிக் கொண்டிருந்தன
கன்னங்களில் ஒட்டிக்கொண்டு வீடு வரை வந்துவிட்ட கோப்பைகளை
ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தினேன்
மூக்கிலிருந்து வீசிய நாற்றம்
பீப்பாய்களின் வயதைக் கணிக்க முடிந்தது
கைகளோடு கால்களும் வரைந்து காட்டிய ஓவியத்தில்
ஆட்டோக்களும் லாரிகளும்
தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தன
குப்பைகளும் சாக்கடையும்
ஆல்கஹால் நிறத்திற்கு மாறத் தொடங்குவதை கவனித்தேன்
உள்ளிருந்து வெளியே குதித்த டேபிள் பாய்
கையிலிருந்த பஞ்சை வைத்து
உணவு மேசையைத் துடைத்துவிட்டுப்
போகிறான்
ஓவென அழுகுரல் கேட்க
நண்பனைத் திரும்பிப் பார்த்தேன்
விடுதி போர்வைக்குள் உறங்கியபடி இருக்கிறது.
2.
இப்படித்தான் அவர்கள்
கதவைத் தட்டுவார்கள்
இப்படித்தான் தாகமென்று நீர் கேட்பார்கள்
இப்படித்தான் கழுத்தைப் பிடிப்பார்கள்
இப்படித்தான் நம் சடலங்களின் மீது
நின்றுகொண்டு
என் நிலம் என்பார்கள்
என் மக்கள் என்பார்கள்
இப்படித்தான்
3
அன்றலர்ந்த மலர்கள்
நாற்பது வயது மகனின் முதுகைத் தேய்த்துவிடும் அப்பா
போதையில் அவன் எடுக்கும் வாந்தியை கையில் ஏந்தும் அப்பா
விழுந்து எழுந்து வருபவனின் புண்ணில் களிம்பு போடும் அப்பா
கிடைத்த பணத்தைப் பறித்துக் கொண்டு போகும் அவனுக்குச்
சமைத்து வைத்துக் காத்திருக்கும் அப்பா
வேலைக்குப் போவதாய் பொய்சொல்லி
ஏமாற்றுபவனுக்கு
பாவம் பார்க்கும் அப்பா
தனது ஆஸ்துமாவிற்கு மருந்து வாங்காமல்
பெட்ரோல் தீர்ந்த வண்டியை நெடுஞ்சாலையில் தள்ளிக்கொண்டு வருகிறார்
ஏதுமறியா பெருநகரத்தின் வாகை மரங்கள் அன்றலர்ந்த பூக்களை இறைத்திருக்கின்றன.