நீயாகவுமிருக்கலாம் என்பதே சாசுவதம்
அதுவொரு எறும்புக்கும்
ஒரு பறவைக்கும்
ஒரு யானைக்கும்
எந்தவொரு உயிருக்கும் நேரலாமென்பதே
சாசுவதம்
உறங்கும்போதும்
விழித்திருக்கும்போதும்
ஒரு பயணத்திலும் ஒரு நடையிலும்
நிகழாலாமென்பதே சாசுவதம்
எந்தக் கணத்தில் எந்த நிலையிலும்
இருக்கின்ற வேளையிலும்
தோன்றாலாமென்பதே சாசுவதம்
நோய்மையில்
விபத்தில் திடீர்
மூச்சடைப்பில்
ஆரோக்கிய தேகத்திலும்
வரலாமென்பதே சாசுவதம்
ஓடி ஒளிந்து மறைந்துகொண்ட போதும் அது விட்டுவிடுவதாயில்லை
என்பதே சாசுவதம்
அதற்கு
தயாராயிருப்பதொன்றே வழி.
நானொரு கைவிடப்பட்ட நதி
என் கரைக்கு எந்தக் காலடிச்சுவடுகளும் வருவதில்லை
எனக்குள் நீந்தும் மீன்கள்
என்னைப் பயன்படுத்திக்கொள்ளும்
என்னிடம் தாகம் தீர்க்கும் வழிகளிலிருந்தும்
ஒரு பிரயோசனமும் இல்லை
எல்லாத் திசைகளிலும்
திக்குத் தெரியாமல் ஓடிக்கொண்டிருப்பேன்
பள்ளங்கள் என்னை உள்ளிழுத்துக்கொள்ளும்
கொடிய வெயில் உறிஞ்சிவிடும்
பனிக்காலத்தில் உறைந்து போவேன்
கயல்களைத் தேடியே பறவைகள் வருகின்றன
சில வேளைகளில் மிருகங்கள் பசியாறிக்கொள்ளும்
நான் கைவிட்டப்பட்ட
தூய்மையான நதி என்று யாருக்கும் தெரிவதில்லை
பெரும் கோடை நாட்களில் எப்போதாவது
முற்றிலும் காய்ந்துவிடும்போது
நதியாகிய நான் காணாமல் போவேன்.
மெளனமாய் எரியும் விளக்கு
மெளனமாய்ப் பூத்திருக்கும் பூக்கள்
மெளனமாய் நிற்கும்
மரங்கள்
மெளனமாய் வீற்றிருக்கும்
ஜென் குடில்
மெளனம் படர்ந்த காட்சியில்
என் பார்வையில்
உறைந்த
நான்.
உன் யாசகத்தை உன்னிடமே பெற்றுக்கொள்
உன் கருணையை உன்னிடமே வேண்டிக்கொள்
உன் பிரார்த்தனையை
உன்னிடமே செய்துகொள்
உன் காதலை உன்னிடமே புரிந்துகொள்
உன் பிரச்சனையை
உன்னிடமே வைத்துக்கொள்
உன் கவலையை
உன்னிடமே சேர்த்து வை
உன் வாழ்வை உன்னிடமே
மறைத்து வை
உன் கண்ணீரை உன்னிடமே புதைத்து வை
சிதைந்த இதயத்தை
உன்னிடமே ஒளித்து வை
உன் தனிமையை
உன்னிடமே தேக்கி வை
எதுவும் முடியாத போது
உன் உயிரை இறப்பிற்கு
கொடுத்துவிடு.
காலிக்கோப்பை என்பது ஒன்றுமில்லை
தேநீரை நிரப்பிய பின் அது என்னவாகும்
அது நிறைந்துவிடும்
நிறைதலென்பது தற்காலிகம்
வெற்றிடத்தின் முன் பேசாமல் இருந்துவிடுங்கள்
நிரம்பிவிட்ட எதிலும் அர்த்தமில்லை
அதுவொரு சாதாரணமான விசயம்
புத்தன் சொல்லச் சொல்ல அங்கு என்ன இருக்கும்
காதுகள் செவிடாக இருக்கும்
அதன் பின் போதனைகள்
ஒன்றுமற்றுப்போகும்
லட்சியத்தில் ஒன்றுமில்லை
அது ஒரு வீண் கற்பனை
புத்தனைக்கொண்டு என்ன செய்வீர்கள்
தியானத்தில் வீழ்வீர்கள்
நடைமுறை வாழ்க்கையென்பது
உண்மைக்கு புறம்பானது
ஓடிவிடுங்கள்
துறவறத்தில் ஒன்றுமில்லை
அதற்காக சல்லாபம் பெரிதில்லை
புதைகுழியில் மறைந்துகொள்ளுங்கள்
நிர்ப்பந்தமற்ற வாழ்வில் எதுவுமில்லை
எதுவுமில்லாத எதிலும் நீயிருக்கிறாய் என்பதைத் தவிர.