cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

ஜீவன் பென்னி கவிதைகள்


கடைசியில் மிஞ்சிடும் பரிபூரணங்கள்.

1.

எளிய பாதையிலிருந்து கைவிடப்பட்ட 

ஒரு அன்பை 

என்றாவதொரு நாள் யாரேனும் பிரித்துப் பார்க்கலாம்.

அதன் ஒரு முனையிலிருந்து 

வாழ்நாள் முழுவதிலும் உதிர்ந்து வந்திருக்கும் 

ஒரு சொல்லை நீங்கள் பார்க்க நேரும் போது

அது வெற்றிடமாகியிருக்கும்.

அல்லது

நீண்ட காத்திருப்பின் அசைவற்ற வொரு

வடிவத்திலிருக்கும்.

இந்தப் பாதைகளிலெல்லாம் எப்போதும்

வெறுங்கையுடனே வந்து திரும்புவது

ஒரு பைத்தியத்தின் சாயலிலேயிருக்கிறது.

எல்லோருக்கும் சில மறதிகளையே

எப்போதும் அவை கையளிக்கின்றது,

அதன் திசைகளை உங்களிலிருந்தே 

துவங்கிக்கொள்ளும் படியாக.

 

 

2.

இரண்டு பாறைகளுக்கு நடுவில் முளைத்திடும் 

ஒரு விதையை உனக்குப் பரிசளிப்பேன். 

பார்க்கப்போகும் ஒரு நிலத்தில் 

இரண்டு மனிதர்களுக்கிடையில்

அதை நீ புதைத்திடுவாய்.

அவ்விருவரும் இல்லாமல் போகும்

ஒரு காலத்தில் அது தன்னை முளைக்கச் செய்து

கொள்ளும்.

காலத்தின் ஒவ்வொரு படியிலும்,

அதன் மீதிருக்கும்

நம் ஞாபகங்கள் குரலெழுப்பிடுகையில்

அது தானாகவேப் பூத்து உதிர்ந்தும் போகும்.

இரண்டு பாறைகளைப் போலிருக்கும் சொற்களுக்கிடையில்

அதன் தடயங்களைத் தேடிக்கொண்டிருப்பது தான்

நமதிந்த கணிந்த வாழ்வு.

3.

நிச்சயமாக ஒரு இடைவெளியில், 

புறக்கணிக்கப்பட்ட பாடலொன்று எங்கோ தீவிரமாகப் பாடப்படுகிறது.

ஒரு குற்றத்தின் மீதியை எங்கோ தொலைத்துவிட்டவன்

எல்லோருக்கும் முன்பாக 

அதற்கென வருத்தம் கொள்ளத்துவங்குகிறான்.

அதன் காலத்தை நாம் கண்டடைந்து 

அவனிடம் ஒருபோதும் கொடுத்திட முடியாது.

அந்தக் குற்றத்தை மீண்டும் முதலிலிருந்து 

அவனைச் செய்யச் சொல்லி மன்றாடலாம்.

அல்லது

சரிந்து கிடக்கும் உடல்களுக்கருகில் முளைத்திடும் புற்களை

தொட்டுப்பார்த்து விட்டு நாம் நகரலாம்.

எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட பாடலொன்று

இப்படித்தான்

ஒன்றிலிருந்து துவங்கிக் கொள்கிறது

அத்தனை மிருதுவானதாக.

.

4.

சிறிய விசயங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் இம்மடல்களை

நான் ஒரு போதும் பிரிக்கப் போவதில்லை.

நேசிக்கப்படுவதன் முக்கியத்தை அது கொண்டுவந்த போது,

வெறுப்பை ஒவ்வொரு நூலாகப் பிரித்திடும் 

ஒரு நுட்பத்தால் மிகவும் கவரப்பட்டிருந்தேன்.

மேலும் 

மிருதுவானவற்றை நம்புவதற்கு அது சொன்ன போதுதான்,

வலியற்று துண்டுகளாக்கும் சில சொற்களின் லயத்தை

இன்னும் இன்னும் கூர்மையாக்கிக்கொண்டிருந்தேன்.

5.

தேங்கிக்கொண்டிருக்கும் சில அழுகைகளின் துளிகளைச்

சேகரித்துக்கொள்ளும் உள்ளங்கையில் 

மெல்ல மெல்ல ஒரு உருவம் வளரத்துவங்குகிறது.

அதன் முகத்தில் சிறு துண்டு கண்ணீரின் உப்பிருந்தது.

அதன் மனது கரிப்பின் சாயலிலிருந்தது.  

கைவிடப்பட்டவர்களுக்கருகில் சிறு பூக்கள் பூப்பதை

நீங்கள் இன்னும் நம்புவதில்லை.

மேலும் 

அது பூக்கள் தான் என்பதையும்.

 

6.

அவனையேத் தனித்தனியாகக் கழற்றிக்கொள்பவன்,

மகிழ்ச்சிக்கு ஒன்றாகவும்

வெறுப்புக்கு ஒன்றாகவும்

துரோகத்திற்கு ஒன்றாகவும்

தன்னைப் பிரித்துக்கொடுக்கிறான்.

கடைசியில் மிஞ்சப்போகும் பெரும் வலிக்கென

அவன் கழட்டிவைத்த சிறு பகுதியொன்று 

அவனிடம் எதுவும் சொல்லாமல் விடுபட்டு ஓடிப்போனது.

அதன் பாதத்தடங்களைத் தடவியபடியே

அவ்வலியின் பரிபூரணத்தை அனுபவிக்கத் 

துவங்குகிறானவன்.

7.

இந்த உலகத்திற்குப் பிறகு,

இந்தத் துயரத்திற்குப் பிறகு,

இந்த நிம்மதிக்குப் பிறகு,

பூத்தையல்கள் நிறைந்த துணிகளை இரண்டிரண்டாக

மடித்து அடுக்குவேன்.

அமைதியின் சன்னமான கனமொன்று

இப்படித்தான் வாழ்வில் நுழைந்து 

கொள்கிறது. 


                                                     

About the author

ஜீவன் பென்னி

ஜீவன் பென்னி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website