மயிலொன்றின் அகவலில் பெரிதுமிருப்பது
அடை மழையொன்றுக்கான சாத்தியப்பாடு…
நீலமணிக்கண்களோடு கிளர்ச்சி கொண்டு பிளிறும் மதக்களிறுகள்
போரின் நெளிவுசுழிவுகளை எதிர்வுகூறுகின்றன …
உதிர்க்கமுடியா பாறைத்துகளென அக ஆர்ப்பரித்தலில்
நிலையழிதல் கொண்டு வண்ணங்களை வாரி உட்செலுத்துகிறது சமுத்திர அலை
வனமொன்றின் சரிவோடு பெருகும் மலையாறென மேகமிறங்குகிறது மழை..
உறையகலா வாளின் மினுமினுப்பும்
குருதி காணும் வேட்கையும் இப்போது
எனதகப்பிழைக்கு….!
நெடுங்கால அற்புதங்களின் அடியில்
அந்திச் சிவப்பு கறையோடு
ஒரு சிலுவை.
தோலுரித்து கடக்கும் நாகவிஷங்களின் மஞ்சள் கலந்த
புள்ளிகளில் கன்னத்துப் பருவின்
சாயல் தேடும் கண்கள்.
ஓடுடைக்கும் மலைக்கழுகிற்கு
ஒரு துண்டு வானம்
நேற்றுப் பிறந்த சாம்பல் புறா
கருவுதிர்த்த எச்சங்களில்
நிறத்தாளம் பகிரும் மூங்கில்
நெருப்பு
கசங்கிய குரல்களில் ஒரு வாழ்தல்
எறும்புகளின் நகர்தலில்
இருப்புக்கும் இன்மைக்கும் இடையில்
மொக்கவிழ பேரச்சப்படுகிறது
உலர்ந்த இலைகளை தன்னுள்ளே இறுக்கிக் கொள்ளும்
காட்டுத்தாவர தேடுவாரற்ற பூவின்
பேரெழில்
வண்ணத்துப்பூச்சின் நிறப்பிரிகை
மகரந்தம்
முகில் சேகரிப்பின் தாழ்ந்த
கிளைச் சொட்டில்
ஒரு பருவம் முகிழ எத்தனிக்கும்
நிலக்கீழ் நீராழம்
பனிப்புகையின் மதாளிப்பில்
ஊடுருவும் இளவெயில்
எண்ணைகுளித்த மழலை
பளபளப்பு
சாரளைக்கற்களின் பழுப்பில்
ஒரு நதி உருகும்
சிலுவைப்பாடு
உதிரம் காணாமல் ஆணிகள் உள்ளிறங்குவதில்லை