1.
என்னை எப்பொழுதும் கட்டுக்குள் வைக்கவே
மூன்று குரங்குகளை
வாங்கி வளர்க்கிறேன்.
மனையாளை நோக்கி
விஷச்சொற்களை வீசும்போதெல்லாம்
ஓடிப்போயவள் வாயினைப் பொத்தும் ஒன்று.
மற்றொரு குரங்கு
ஓடோடிவந்தென்
செவிகளைப்
பொத்துகிறது.
மூன்றாவது குரங்கோ
தன்கண்ணைத் தானே
பொத்திக்கொண்டதுபோல் பாசாங்கு செய்கிறது..
2.
உள்ளே
உடைந்துருகி
தழலென கொப்பளித்து
விழியினிறுற்று
பொங்க
கன்னக் கானகம் கடந்து
நாப்பள்ளத்தில்
உப்பிட்ட இரத்தமாய் கரைய..
நீயோ
கண்ணீரேவெனக்
கடந்து போகிறாய்..
3.
கோடைக்காலத்தின்
கிளையில் வந்தமர்கிறது
சிட்டுக்குருவி
ஏற்கனவே பறந்திருந்தன
இலைகள்
4
கண்ணாடிக் குடுவையில்
நீந்திச் சலித்த மீன்
குளமொன்றைக் கனவு காண்கிறது.
கையளவு மண்ணள்ளி
குடுவையில் கரைத்தும்
கனவு நனவானது.
5.
உடலின் நதிக்கரையில்
தகித்துக்கிடக்கிறேன்
கனிந்தவுன் தயவால்
மெல்ல கால்நனைத்து
நதியின் மையம்நீந்தி
சூழலுள் சிக்குண்டு தணிந்து சாகிறேன் ‘சிவனே’யென்று .
6.
பழைய நூலினை திறந்த பொழுது
சறுக்கி விழுகிறது
உலர்ந்த இலை.
பரிவின் கனமோ
உடலின் சிறு துண்டோ
சொற்களின் கூடோ
யாதொன்றுமற்ற
தற்செயல் நிகழ்வோ
இக்கணம் போதுமானதாகிறது
கனம் செய்வதற்கு.