1. நேற்று
கேளாய்
உன் செவிக் கடலுள்
தேங்கிக் கிடக்கும்
சொற்களை மீன்களாக்கு
மிதந்தவை மேல் வந்து
மறந்ததை
நினைவுகொள்ளச் செய்யும்
வாழ்வென்பது
இன்றைக்கானதல்ல
நேற்றின் தொடர்ச்சி.
2. நாளை
போதும்
விழும் நிழல்களின்
ஆட்டங்களில் ஆனந்தித்திருந்தது
பக்கக் கட்டுப்பாடில்லாதது
பெருமிதம்
கொஞ்சம் மேல் நோக்குவோம்
வானில் நிறைந்திருக்கின்றன
நாளையின்
நட்சத்திரங்கள்.
3. அன்றாடங்கள் தோறும்..
காலைச் சுற்றும்
நாயாகக் கிடப்பேன்
சட்டென
வெடித்துச் சிரித்தாள்
மௌனித்து
மீண்டும் மீண்டும்
நம்பி ஏமாந்த
வலி உறைந்த சொற்கள்
எதிரொலித்துக் கொண்டிருந்தது
அவளின் சிரிப்பில்.
4. பூங்கா
கதிரொளியில்
மின்னும் பச்சைகள்
நிறைந்த பூங்கா
தன் சிரிப்பில்
வசீகரித்துக் கொண்டிருந்தாள்
குழந்தை
அப்பாவும் அம்மாவும்
சரியான விளையாட்டை
சொல்லிக் கொண்டிருந்தனர்
வேறு வேறான
விளையாட்டுகளை
நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.