cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

முதுகுக்கத்தி


1.

அவனது வாய்ப்புகளில் ஒன்றை
இருகைகளிலும் ஏந்திக்கொண்டவள்
ரகசியமானதொரு ஏணியை உருவாக்குகிறாள்.
அதனுடன் தன் பயணத்தைத் தொடர்கின்றவள்
உச்சிக் கிளை பறவையாகிறாள்.
அதன் பிறகு,
அவனது சிதைக்கான
முதல் சுள்ளியை,
அவனது கண்ணீருக்கான
முதல் முதுகுக்கத்தியை,
அவனது நீள் இரவுக்கான
முதல் தோல்வியை,
பேரானந்தத்துடன் அப்பறவை கொண்டு வந்தது.
ஓர் இரவில் தொலைப்பேசியின் வழியே
அவனது மனதுக்குள்
எச்சமிட்டுச் சிரித்தபடியே பறந்து சென்றது.
அப்போது,
முதுகுக்கத்தி இடம்பெயர்ந்து
மார்பில் இறங்கியிருந்ததைக் கவனித்தவன்
ஒரே ஒரு முறை மட்டும்
தனக்குள் சிரித்துக்கொண்டான்.


2.

உயிரை மட்டும் சுமந்துகொண்டு அரூபமாக
திரியும் ஓர் அந்நியனை நானறிவேன்.
அவனுக்கு முகமில்லை.
அவனுக்கு கைகள் இல்லை.
அவனுக்குக் கால்கள் இல்லை.
அந்த அரூபமா கட்டி இழுத்துவந்தேன்
ஆளில்லா கயிற்றின் மறுமுனை கண்டு குரைத்தது
நாய்.
இழுத்து வந்தவனின் கதறல்கள் யாருக்கும் கேட்கவில்லை.
உடலை எங்கு தொலைத்தாய் என்றேன்.
உடலை சுமைந்தலைவது எவ்வளவு துயரமானது
துயரத்தை தொலைத்த இடம் நினைவிலில்லை என்றான்.
கயிறு தன்னைத் தானே அவிழ்த்துக்கொண்டது.


கவிதைகள் வாசித்த குரல்:
பாலமுரளி
Listen On Spotify :

About the author

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். ‘நிலாரசிகன்’ என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் உள்ளார்.

வலைத்தளம்: www.rajeshvairapandian.com

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website