1.
சாபமிடப்பட்ட
பையைத் தூக்கி கொண்டு அலைகிறார்
இறந்து போனவர்
சாபம் வாங்கியவர்கள்
பெயர்கள் துருத்திக்கொண்டிருந்தன
பசியோடு இறந்தவன்
இயற்கை மரணம் எய்தவன்
என்று
நீண்டுக்கொண்டே போகிறது
பட்டியல்
இருப்பை வெளிகாட்டும்
பலவீனங்களும்
நகைப்புகளும்
சுய தாபத்தை
அனைத்து கொண்டு வெளியேறியபின்
அர்த்தமற்ற
சாவை விழுங்கி செரிக்கிறது
பிரபஞ்சம்..
2.
கடந்து வந்து கொண்டிருந்த
இரைச்சல்
தலைத் தூக்குகிறது
ஈசல் போன்ற பறத்தலில்
இறத்தல் சாத்தியம்
வருந்தும் உயிருக்கு
பாடம் எடுக்கிறார்கள்
மெய் நிகர் பார்வையோடு
இருப்பை நெருங்கி
உறவாடுகிறது உடல்
முழுமையடையாத
பின்னிரவு வேளையில்
இருப்பு என்பது
இல்லாவிடில்
இறப்புதான்
அகாலத்தின் அரூபத்தில்
ஒரு தற்காலிக
பயணியாக
இடம் பெறுகிறது
இடைவெளி
3.
தாம்பூலத்தட்டுகள்
குறைந்து வருவது
அனேகமாய்
உச்ச வரம்பின்
சண்டித்தனத்தில்
சிவந்த வானத்தைப் போல
நாகரிகப் பசுக்கள்
தழைகளைத் தேடுகின்றன
விடுவிக்கப்பட்ட
நகரத்தில்
தேடிக் கலைக்கின்ற
ஒற்றை யானையாய்
இரும்பு வேலியைக்
கடக்கும் மனோபாவத்தில்
குறுகிய வயிற்றை
நிரப்பும்
அவன் சகவாசம்
வந்து செல்லும்
காற்றாலை மின்சாரம்
தூரதேச சமிஞ்கையால்
வெளிச்சம் பெறுகிறது
இயற்கையின் ருசியென
நடைபயிலும் உலகிற்கு
முடிவேதுமில்லை
சரிபாதி துக்கத்தில்
சுவாசித்துக்கொள்ளும்
நுரையீரலின்
கசப்பில்
இருமலும்
அதிகாரப் பகிர்வும்
வயிற்றைக் கீறுகின்றன
பதில்களற்ற
நாளையின்
டிஜிட்டல் கோழியை
பிரசவித்தபடியே இருக்கிறது
இரவு…
4.
உள்ளே ஈரமாக
வெளியே காய்ந்தபடி
கணக்கும் மயிலிறகாய்
தனிமைச் சிறையென
காத்துக்கிடக்கும்
தற்சார்பு
உள்ளதை
உள்ளபடியே
பகடி செய்யும்
வாழ்வில்
சிறு குரல்
வேங்கையின் பசியென
ஆறுதலைத் தேடி
அலைகிறது
தத்துவம்
கீழ்க்கண்ட நிகழ்வில்
ஒற்றைக் காகிதத்தில்
நீள் வட்டப்பாதை
ஒன்றின்
அளவைகளில்
மற்றொன்றின் தரம்
கிட்டத் தட்ட
வெந்து தணிகிறது
காடு
பசிக்கும் வயிறென…