cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

தென்றல் சிவக்குமார் கவிதைகள்


 ‘அது’

1.

சென்ற முறை சந்தித்தபோதும்
இதே உடைதான் அணிந்திருந்தேனா?
ஆமாம்.
இதே உணவகத்தில்
இதே பானத்தைத்தான் அருந்தினோமா?
ஆமாம்.
ஆனால்
இந்த முறை என்னில்
எதுவோ மாறியிருக்கிறது,
அப்படித்தானே?
ஆமாம், இந்த பானத்தை
நீ விருப்பமே இல்லாமல் பருகினாய்.
எனில், இந்த உடையை
விரும்பித்தான் உடுத்தியிருக்கிறேனா?
இல்லையா?
இங்கே கொஞ்சம் புன்னகைத்துக் கொள்ளவா?
என்ன ஆயிற்று உனக்கு?
விடை தெரிந்த வினாக்கள்
வெளிப்படுகையில்
அதுவும்
சங்கடப்படுமாம்,
தெரியுமா உனக்கு?

******

2.

அதனை
நீ முதல்முறை எறிந்தபோது
மேலேறத் தொடங்கியது.
ஒவ்வொரு முறை
நீ பார்க்கையிலும்
உன் கணிப்பை உடைத்து
நீ பார்த்த படிகளுக்கு
மிகவும் கீழே நின்றிருந்தது.
இம்முறை
நீ அதனை எறிந்தபோது
இறங்கத் தொடங்கிவிட்டது.
இப்போதும்
உன் கணிப்பைப் பார்த்துச் சிரிக்கும்
வெற்றிடங்களையே
உனக்கு அருளியுள்ளது.
ஆனால்,
கீழே, வெகு கீழே
வேகமாக, வெகு வேகமாக
முன்னேறுகிறது
அது.
கீழிறங்குவது முன்னேற்றம் ஆகாதென்று
உனக்குத் தோன்றுகிறது, இல்லையா?
எதற்கும்
அதனிடமும்
ஒருமுறை கேட்டுப் பார்.

******

3.

தொலையட்டும் என்று சொன்னது
அதற்கு
வசதியாகப் போய்விட்டது.
இத்தனைக்கும் நேரடியாகச் சொல்லவில்லை.
தேடும்படி தொலைதல்
எப்பேர்ப்பட்ட கலை,
அது அந்தக் கலையை
போதிக்கும் அளவுக்குக் கற்றிருந்தது.
தேடும்பொழுது எழும் குற்ற உணர்வில்
அதற்குப் பிடித்த அதே அனல் மணம்.
தன் அவசியம் பற்றிய
அறிவுரை ஏதுமில்லை,
தானில்லாத வாழ்வு பற்றிய
முன்னோட்டம் இல்லை.
நாளை முதல் இதெல்லாம் இராது
என்ற குறைந்தபட்ச அறிவிப்பையேனும்
அது
செய்திருக்கலாம்.
தொலையட்டும் என்பது அனுமதியல்ல.
அதற்கும் தெரியும்
அது
ஓர்
ஆசீர்வாதம்.


கவிதைகள் வாசித்த குரல்:
தென்றல் சிவக்குமார்
Listen On Spotify :

About the author

தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website