cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

வருணன் கவிதைகள்

வருணன்
Written by வருணன்

  • எட்டிப் பார்க்கும் விரல்கள்

பார்த்தும் பாராததாய்
கனிந்தும் கனியாததாய்
நிகழ்த்தப்பட்ட வேடிக்கைகளை
நகரத்துவங்கிய பின்னர்
பேருந்திருக்கையின் யன்னல் வழி
மெல்ல எட்டிப் பார்க்கிற விரல்கள்
இல்லையே நான் பார்த்தேன் என்கின்றன.
அக்கணத்தின் அத்தனை அழகையும்
தேனறைகளில் சேமிக்கிறேன்.
விடலைத்தனங்கள் விடைபெற்று
நம் காதல் வயதுக்கு வருகின்ற நாளில்
மென்னலகால் துளித்துளியாய்
நீயுறுஞ்சும் அழகு காண
உனக்கொரு தேனடை தருவேன்.


  • சொற்கள் மீந்திருக்கும் இரவு

மொத்த உடலே உவர் சுவையில்
ஊறும் காயென கடுங்கோடையிரவில்
வெயிலைக் கனவிலும் கண்டு
விரிப்பில் புரள்கிறது.
அவள் அருகிலில்லாத துக்கத்தை
அவள் இனி இல்லவேயில்லையெனும்
பீங்கான் ஜாடிக்குளிருந்து எடுத்து
அருகில் கிடத்திக் கொள்கிறான்.
துக்கத்தைப் புணர முயன்று தோற்றவன்
அஜ்ஜாடியினுள் புக முனைந்து
வெற்றியும் கொள்கிறான்.
இன்னும் ஆயிரமாண்டுகள் கழித்து
யாரேனும் தேய்த்து வெளியேற்றுகையில்
ஜீன் என எழுவான்.
கேட்பதெல்லாம் தருவான் அப்போது
அவனிடம் தான் இருக்கின்றனவே
ஆயிரம் ஆண்டுகளின்
சொற்கள் மட்டுமே மீந்திருந்த இரவுகள்.


  • அகந்தையுண்ணும் அர்த்தங்களின் கண்ணாம்பூச்சி

தொடும் தூரத்தில்
ஒரு வாக்கியத்தை வைக்கிறேன்.
உன்னை அசைத்துப் பார்க்கிற
அர்த்தம் பொதிந்த அதனை
கண்டதும்
சிலிர்த்துக் கொள்கிறதுன் சுயம்.
பதிலாய் நீயொரு வாக்கியத்தை
அர்த்தங்களை மட்டும் எங்கோ எறிந்துவிட்டு
மிக அண்மையில் வைக்கிறாய்.
அடிபட்டு வெறியூறிய நாயென
அந்த வாக்கியத்தையே சுற்றிச் சுற்றி வருகிறேன்.
மொழியின் கண்களைக் கட்டிவிட்டு
ஆடுகின்ற கண்ணாம்பூச்சி
இந்த நாய்க்கு புரியவேயில்லை.
கொஞ்சம் இரங்கு
அர்த்தங்களின் திசைகாட்டும் முகமாய்
ஒரு எலும்புத் துண்டையேனும் எறி.


கவிதைகள் வாசித்த குரல்:
வருணன் 
Listen On Spotify :

About the author

வருணன்

வருணன்

இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website