1.
சகடையில் சிக்கிய
வாளியென
ஏற்றி இறக்குகிறது
வாழ்க்கை.
எதை நிறைப்பது?
இறைக்க இறைக்க
ஊறிக்கொண்டே தான்
இருக்கிறது.
ஆயாசப்பட நேரமின்றி
காலியான தோண்டி
வரிசையில் நிற்கிறது.
காலச் சக்கரத்தின்
கடைசி சுற்றிலும்
நிறை நாழி என்பது
கனவே..
அள்ளவும் முடியாமல்
கொள்ளவும் முடியாமல்
இதென்ன அழிச்சாட்டியம்?
ஆதியுமில்லை
அந்தமுமில்லை…
அடங்காத மனசோடு தான்
ஆயுள் பரியந்தம்.
2.
கனவுகளின்
ஊடுபரவலை அனுமதிக்கும்
நீர்க்குமிழிகள்
நினைவுபட்டு உடைந்து
மீண்டும் நீர்த்திவலையாகிவிட
இருத்தலும் இல்லாமையுமாய்
அரூபத்தின் நிழல் தேடும்
மீச்சிறு ஒளியாய்
மாற்றிக் கொள்ள
முனைகிற
“நான்”
என்னைத் தேடித் தேடி..
சுயமெனும் கிரீடத்தைச்
சூட்டிக் கொள்ள
விரும்புகையில்….
உயிர்த்து மரிக்கிறது
இன்னுமொரு
“நான்”..
3.
மனக்காடெங்கும்
மதம் பிடித்த
மத்தகமொன்றின் பிளிறல்.
அவ்வப்போது
அச்சமூட்டும் அந்தகார இருள்.
வழிநெடுக
கசப்பும் துவர்ப்பும்
விரவிக் கிடக்கிறது.
கை வளைவில் இருத்தி
காதளவு புன்னகையுடன்
கண்களில் கர்வம் மின்னும்
ஒளிப்படங்கள்..
காட்சிப் பிழை.
வலிகளும் வேதனைகளும்
உறுத்தும் ஊவாமுள்.
அடிக்கடி இம்சிக்கிற
இடுப்பெலும்பை
வீசியெறியவா முடியும்?
கடுகளவு கரிசனம்
போதும்
காலை காஃபி மாதிரி
காலமுச்சூடும்.
இப்படியாகத்தான்
வெள்ளிவிழா
வைர விழாக்கள்..
மிகவும் பிரமாதமான ஆக்கம்
வாழ்த்துக்கள் கவிஞருக்கு
அன்புடன்
குருநாதன் சீனிவாசன்