-
உயர்திணைக் காகிதம்
வீதியில் கேட்பாரற்று கிடந்த
சில காலப் பழைய புத்தகம்.
அதனை எடுத்து
முன்னும் பின்னும்
திருப்பிப் பார்த்து கக்கத்தில்
அணைத்துக் கொள்கிறான்
மனப்பிறழ்வுற்ற ஒருவன்.
படுக்கையில் தலைக்கு வைத்துக் கொள்கிறான்.
வியர்வைக்கு விசிறிக் கொள்கிறான்.
பூச்சிகளை அடிக்கவும் பயன்படுத்துகிறான்.
பக்கங்களை பூ பற்கள் போல் மடித்து
விளையாடுகிறான்.
எப்போதாவது பழைய வாசனையை
நுகர்கிறான்.
சில பக்கங்களைக் கிழித்தும் விட்டான்.
கொஞ்ச நாளில் அவனோடு
அது இன்னும் பழையதாகியது.
இறுதியாக அப்புத்தகத்தை
தன் குளிருக்கு எரியூட்டினான்.
புத்தகத்தின் சொற்கள் மட்டும்
அவனை வாசித்துக் கொண்டிருந்தபடி
அவனோடே தங்கிப் போனது.
இப்போது
அவன் ஒரு புத்தகமானான்.
-
பெண் நெடில்
ஆழத் துயரில் ஆட்பட
விடுபடத் தெரியும் நேர்த்தி
சொல் மிகுதியானாலும்
தகுதியிழந்தாலும் சமன்படப் புரியும்
ஆறுதல்.
எந்தத் தீ சந்தேகிக்கிறதோ
அந்த ஒளியால் நிழல் தரத் தெரியும்
அறிவு.
வடுக்களால் வலி சாயம் பூசிய
உடலுக்குள் அணுக்கள் தோறும்
அன்பு செய்யத் தெரிந்த பேருளம்
இளகி வளைந்து இறுகப் பற்றி
குறுக வனைந்தோரையும்
வாழ்த்தும் நன்னெறி
தன்பிறப்பின் மீது தாமேயுமிழாமல்
தன்னிறப்பின் வரை வாழ்வின் கடனை
புறவுலகுப் பயனுறப் பொருள் செய்யும்
தேவ படைப்பு
எதிர் இனமே ஆண்
எதிரி இனமல்ல என்பது தெளிவாள்.
அவள் சுமந்து ஈனுகிற எல்லாமே
பிரபஞ்சத்தின் பிரமிப்பென அறிவாள்.
பெண் நெடில்.