பூ!
“வெறுந்தலையா போறியே…
கொஞ்சம்
பூ வாங்கி வெச்சுட்டு போம்மா!”,
என்பாள்
அந்த நடைமேடை பூக்காரபாட்டி!
‘ வேண்டாம் ‘ எனும்படி
தலையசைத்துக்கொண்டே
“உடம்ப பாத்துக்கோங்க பாட்டி”,
என்பேன் நான்!
ஒரு நாள் கூட
நான் அவளிடம்
பூ வாங்கியதும்
இல்லை…
ஒருநாளும்
அவள் தன் உடம்பைப்
பேணவும் இல்லை!
நடைபாதையில்
சிலநாளாய் அவளைக் காணவில்லை…
யாராவது
பூ வாங்கிக்கொள்ளச்
சொல்ல மாட்டார்களா
என்றிருக்கிறது!
உதிரும் மஞ்சள்!
மஞ்சள் பூக்கள் அடர்ந்திருந்த
மரமொன்றின் அடியில்
பள்ளிச் சிறுமி நான்
தினமும் நிற்பேன்!
தலைமீது
ஒற்றைப் பூ மட்டும்
உதிர்ந்து விட்டால் போதும்,
அன்றைய நாளில் எல்லாம்
சுகப்படுமென்று
நம்பியிருந்தேன்….
அன்றையதேர்வில்
படித்த கேள்விகள் மட்டும்தான்
வரும் என்று,
என் பிரியத்துக்குரிய
ரெமி டீச்சர்
என்னை
‘வெரி குட் கேர்ள்’
சொல்லுவாள் என்று!
வேப்பமுத்துக்கு
சவ்வுமிட்டாய் வாட்ச்
கட்டிவிடுகிற தாத்தா,
கொசுறாய் கொஞ்சம்
மிட்டாயை
என் கன்னத்தில்
ஒட்டுவாரென்று…
எல்லா நாளும்
கேட்டவுடன்
மலர் உதிர்த்து விடும் மரம்,
“நீ எப்போதும் என்னுடன்
இருப்பாயா?”
என்றபோது,
பூவையுதிர்க்காமல்
சும்மாயிருந்தது…
பிறகொரு நாள்
அவ்விடத்தில் தார்ச்சாலை
வந்தது!