-
எறும்பெனும் குமையும் காமம்
பச்சை மலைபோல் தோன்றும்
இதனை
என்ன செய்துவிடக் கூடும்
இச்சிறிய எறும்பு ?
மெல்ல ஊர்ந்து
மேலும் கீழும் ஏறி
இறங்கி
கடித்துச் சுவைத்து
செல்லாவழியும் செல்வழியும்
நிறம் கடத்தி
சுவை கடத்தி
மணம் கடத்தி
அதனதற்கு மட்டுமே கேட்கும்
இசை கடத்தி
தீண்டித் தீண்டி
திசை கடத்தி
ஒன்றன்பின்
ஒன்றென
ஊர்ந்து
இரண்டு நான்காகி
இமைக்கும் நேரத்தில்
பத்து நூறாயிரம் ஆகி
பல்கிப் பெருகி
மெத்தன மொய்த்து
எத்துசித்துபித்துமுற்றி
உள்ளும் புறமும்
பியத்துத்துய்த்துய்த்துயிர்த்து
முடிந்த பின்னும்
தொடரும் வரிசையில்
தொடக்கம் புற்றா
இரையா
என மயங்க
மலைக்க வைக்கும்
இச்சை மலைகளின் மேல்
சாரி சாரையாய்
ஊர்ந்தணைந்து
எச்சமுமிச்சமுமில்லாதுச்சமெனத்துருவியுச்சத்தில்
-
நட்ட கல்லும் பேசுமோ
காந்தியின் மேல் காகம் எச்சம் இடுகிறது
காந்தி கம்மென்று இருக்கிறார்
காந்தியின் மேல் போடப்பட்ட மாலைகள்
காய்ந்து சருகாகி உறுத்துகின்றன
காந்தி தேமே வென்று இருக்கிறார்
காந்தி சிலையின் கீழே
சாராயம் குடித்தவன் படுத்திருக்கிறான்
காந்தி கப்சிப் என்று இருக்கிறார்
காந்தி சிலையின் கீழே
வெட்டிக் கொண்டுவந்த தலையை
வீசிச் செல்கிறான் ஒருவன்
காந்தி ஆடவில்லை அசையவில்லை
காந்தியை மீண்டும்
துப்பாக்கியால் சுடுகிறாள்
பூஜா சகுன் பாண்டே
காந்தி
சாந்த சொரூபியாக மிளிர்கிறார்