1. கைக்குட்டை
முளி தயிர் பிசைந்த
செங்காந்தள் விரல்களை
முந்தானையிலேயே
பெண் ஒருத்தி
துடைத்துக் கொள்வதாக
குறுந்தொகையில் ஒரு காட்சி
அந்தக் காட்சி எனக்கு நினைவூட்டுகிறது
சீருடையோடு கைக்குட்டையை
ஊக்கால் குத்திக் கொண்டு திரிந்த
ஆரம்ப பாடசாலை நாட்களை
குழந்தையாக இருக்கும் போது
அம்மாவின் முந்தானை தான்
எல்லோருக்கும்
கைக்குட்டையாக இருந்திருக்கும்
மழலையாக இருந்த போது
உணவை அவளே ஊட்டி விட்டு
முந்தானையால் வாயையும்
துடைத்து விடுவாள்
வளர்ந்து விட்ட இப்போது கைக்குட்டை
வைத்துக் கொள்ளப் பிடிக்கவில்லை
உண்ட பின்பு
முந்தானை ஞாபகத்தில்
சட்டையை இடுப்பு வரை மேல் ஏற்றி
அதிலேயே துடைத்துக் கொள்கிறேன்.
2. மகப்பேறு
செடி
கொடி
மரம் யாவற்றுக்கும்
பூ என்பது அடையாளம்
அதுவரைக்கும்
பெயர் தெரியாமல் இருந்த
செடிகள், கொடிகள் மற்றும்
மரங்களின் பெயர்களை
மலரும் முதல் மலர் அம்பலப்படுத்திவிடுகிறது
அப்படித்தான் விழுந்த மழையில்
துளிர்த்த இந்தச் செடியின்
பெயரும் தெரியவில்லை
ஒவ்வொரு இதழாலும்
சிரித்துக் கொண்டு
முதல் பூ பூத்த போது
அதை ஆதிரை
‘வெயில் ரோஜா’ செடி என்றாள்
பெயர்ச் சொல்லும் பிள்ளை என்பார்கள்
உண்மையில் பெயர் தெரியாத
தாவரங்களின்
பெயர்களை எல்லாம்
மலர்கள் தான் சொல்கின்றன.
3. சோதியே என் சுக வாரியே
நான் கவிதையில் எழுதும்
பெண்ணைப் படைக்க
இன்னும் பிரம்மன் களிமண்ணை
பிசையத் தொடங்கவில்லை
உண்மையில் என்னாலும்
அவளை முழுமையாக
எழுதிவிட முடியவுமில்லை
அவள் தள்ளுநடையிட்டு
தவழ்ந்து விளையாடாவிட்டாலும்
பிள்ளைமை நீங்காத பெற்றியாள்
எந்தச் சேயைக் கண்டாலும்
தாயாக மாறிவிடும் பேரியாழ்
அவள் கொலுசு
எனக்குப் பேரிகை
அவள் அஞ்சனக்கோல்
எனக்குத் தூரிகை
அவளோ தனக்குவமையில்லாத காரிகை
என் வாஞ்சனையான அவள் மேனி காஞ்சனம்
கூந்தல் அஞ்சனக் கருமுகில்
கண்கள் கொழுந்தெழில் காட்டும் சோதிகள்
வானம் பொழிந்தது போக
மிச்சம் வைத்த மேகத்தை
எங்கே கொட்டுவது என்று தெரியாமால்
திகைத்துக் கொண்டிருந்த போது
அவள் கண்களுக்குத் தீட்டியது போக
மிச்சம் இருந்த மையை
கூந்தலில் தடவிக் கொண்டிருந்தாள்.